காலம் கடந்து கொண்டாடப்படும் மணிரத்னம் படம் - 'ராவணன்'னுக்கு வயசு 14..!

 
1

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரியாமணி, ப்ரித்விராஜ், பிரபு ஆகியோர் நடித்து ராவணன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்திற்குப் பின் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்தார் ஐஸ்வர்யா ராய்.இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழில் ராவணன் என்றும் இந்தியில் ராவண் என்று வெளியானது. தமிழில், ராவணனாக நடித்த விக்ரம், இந்தியில் ராவணனை வேட்டையாடும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

ஒரு படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அதன் மறு ஆக்கத்தில் அதே கதையின் வேறோரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதற்கு இந்திய சினிமாவில் முன்னுதாரணங்கள் உண்டு. ஆனால், ஒரே நேரத்தில் ஒரே கதையைக் கொண்டு உருவான இருமொழிப் படங்களில் ஒரே நடிகர் முற்றிலும் எதிர்நிலைகளில் உள்ள இருவேறு முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தது இதுவே முதல் முறை. விக்ரமின் பன்முக நடிப்புத் திறமை மீது மணிரத்னத்துக்கு இருந்த அபார நம்பிக்கையே இந்தப் புதிய முயற்சிக்கு வித்திட்டது. இந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

1

‘வீரய்யா’ என்கிற கதாநாயகன் காவல்துறை தனது தங்கையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றதற்கு பழிதீர்க்க, காவலர் தேவ் பிரகாஷ் (ப்ரித்விராஜ்) மனைவியான ராகினியை (ஐஷ்வர்யா ராய்) கடத்தி அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். தொடக்கத்தில் வீரய்யாவை வெறுக்கும் ராகினி அவனது கதைகளை தெரிந்துகொண்ட பின் அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்கிறார்.

தீயவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் நியாயங்களையும் நல்லவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் மறு பக்கத்தையும் முன்வைத்து எடுக்கப்பட்டதால் படம் வெளியான போது பலவிதமான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படத்திற்கு சுஹாசினி மணிரத்னம் வசன கர்த்தாவாக இருந்தார்.மேலும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் பிரம்மாண்ட அருவிகளும் மலை முகடுகளும் இருள் சூழ்ந்த காடு, நீரோடை என ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி எடுத்திருப்பார். ஏஆர் ரஹ்மானின் இசையில்'உசுரே போகுதே, கோடு போட்டா, காட்டுச்சிறுக்கி பாடல் படம் வெளியாவதற்கு முன்பே பட்டையை கிளப்பின.

1

இவ்வளவு சாதக அம்சங்கள் இருந்தாலும் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவான இந்தப் படத்தில் கதை நிகழும் களம், இடங்கள், சில நடிகர்களின் முகவெட்டு, பேச்சு வழக்கு, பின்னணியில் வெளிப்படும் பண்பாட்டு அம்சங்கள் ஆகியவை முற்றிலும் தமிழுக்கு அந்நியமாக இருந்தன. இதனால் படமும் தமிழ் ரசிகர்கள் பலருக்கு அந்நியமாகிவிட்டது. விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிந்தைய பேட்டி ஒன்றில் மணிரத்னம் இந்த விஷயத்தில் தன்னுடைய முயற்சி தவறாகிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

இந்திக்காக இதுபோன்ற சமரசம் செய்யப்பட்டிருந்தாலும் இந்தப் படத்தின் இந்திப் பதிப்பு தோல்வியுற்றது. படத்தின் மற்ற நிறைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் ‘ராவணன்’ படத்துக்கு வணிக வெற்றியை அளித்தார்கள். 2010ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் ஒன்றாக ஆனது.


 


 

From Around the web