இன்று வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர்- அப்படி என்ன ஸ்பெஷல்.?

 
ponniyin selvan

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொருவருடைய கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை வெளியிடுவதற்கு பதிலாக, அவர்கள் படத்தில் இருக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரிக்கச் செய்து வருகிறது. பொன்னியின் செல்வன் துவங்கி, நந்தினி கதாபாத்திரங்கள் வரை பொன்னியின் செல்வன் 2 படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுடைய வீடியோ அனைத்தும் வெளியாகிவிட்டன.

பொன்னியின் செல்வன்

முந்தைய பாகத்தில் பொன்னியின் செல்வன், வந்தியத்தேவனுடன் கடலில் மூழ்கிவிடுவார். தஞ்சாவூருக்கு அவர் இறந்துவிட்டதாக செய்தி வரும். அதோடு அந்த பாகம் முடிந்துவிட்டது. ஆனால் பொன்னியின் செல்வன் சாகவில்லை, அவர் தஞ்சாவூருக்கு தான் வருகிறார் என்கிற ரீதியில் பொன்னியின் செல்வன் 2 கதை இருக்கும். அதற்கான காட்சிகள் அடங்கிய பி.எஸ் 2 டீசர் கட் வெளியிடப்பட்டது.

வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் தான் ஹீரோ. ஆனால் படத்தில் அவரும் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அருள்மொழிவர்மனுடன் கடலில் மூழ்கிப் போன வந்தியத்தேவன், பத்திரமாக மீட்கப்படுகிறார். கதையில் எல்லா ரகசியங்களும் தெரிந்தவர் அவர் மட்டுமே. அதனால் சோழ குலத்தை காக்க தொடர்ந்து அவர் தனது சதிகளை அரங்கேற்றுவார். அதுதொடர்பான டீசர் கட்டுடன் பி.எஸ் 2 வந்தியத்தேவன் பாத்திரப் படைப்பு அமைந்துள்ளது.

குந்தவை

ஒவ்வொன்றாக வந்துகொண்டிருப்பது கதாபாத்திரங்களுக்கான டீசர் என்பது, குந்தவையின் காட்சி வந்த பிறகு தான் தெரிந்தது. பிஎஸ் 1 கிளைமேக்ஸில் கடலில் குதித்த பெண் யார்? என்கிற கேள்வியுடன் டீசரில் வருகிறார் த்ரிஷா. படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் அதுதான் கேள்வியாக இருந்திருக்கும். அதற்கான விடை நிச்சயமாக படத்தில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆதித்த கரிகாலன்

பொன்னியின் செல்வன் கதை தஞ்சாவூர் மற்றும் கடம்பூரை சுற்றி தான் நடக்கும். தஞ்சாவூருக்கு வந்தால் ஆதித்த கரிகாலன் உயிர்பிழைப்பார். ஆனால் அவரை கடம்பூருக்கு கொண்டுவரவே பாண்டியன் ஆபத்துவதிகள் விரும்புவர். அதற்கேற்றவாறு நந்தினியும் காய்களை நகர்த்துவாள். இறுதியாக நந்தினியின் அழைத்ததன் பேரில் கரிகாலன் கடம்பூருக்கு வந்துவிடுவார். அவருடைய வருகைக்கான காட்சி தான் டீசர் கட்டில் இடம்பெற்றுள்ளது.

நந்தினி

பொன்னியின் செல்வன் கதைக்களமே நந்தினி தான். நந்தினியின் நகர்வு தான் கதை. நந்தினியும் ஆதித்த கரிகாலனும் கதையில் ஒரேயொரு முறை தான் சந்திப்பார்கள். அப்போது கரிகாலனுக்கு ஏற்படும் ஆபத்து சோழ குலத்துக்கு இருண்ட காலமாகிவிடும். அதை நடத்தி வைக்க தான் நந்தினி கடம்பூருக்கு வருவாள். அங்கு வரும் நந்தினி, நிலவறை வழியாக பாண்டியன் ஆபத்துவதிகளை  கடம்பூர் மாளிகைக்குள் அனுமதிப்பாள். அந்த காட்சி தான் நந்தினியின் டீசர் கட்டாக படத்தில் வந்துள்ளது. 

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் 70 ஆண்டுகால கனவாகும். அதை மணிரத்னம் கடந்தாண்டு திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். மொத்தம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள படத்தின் முதல் பாகம், கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. படத்துக்கு மிகப்பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளிவரவுள்ளது. 

From Around the web