மகனை தொடர்ந்து தந்தையுடன் கைக்கோர்க்கும் மாரி செல்வராஜ்..!!
தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
மாமன்னன் படத்துடன் உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்கு விடை கொடுத்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். அதனால் தமிழக ரசிகர்களிடையே இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாமன்னன் படம் முடிந்ததும், அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ்.
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் பணிகள், ஜூலை மாதத்தில் துவங்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் துருவ் விக்ரம் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அவருடைய புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் கதையை முடிவு செய்துவிட்டதாகவும், இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் வெளியீட்டை தொடர்ந்து அவர் இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. அதற்கு மகன் துருவ்வை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தின் பணிகளும் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.