மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி..!

 
12-த் மேன்

மலையாள சினிமாவில் ஹிட் காம்போவாக இருக்கும் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரள சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்தாலும், ஜீத்து ஜோசப்பை தேசியளவில் பிரபலமாக்கிய படம் ‘த்ரிஷ்யம்’. இதில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். அன்று ஆரம்பித்த இந்த கூட்டணி தொடர்ந்து வெற்றிநடைப்போட்டு வருகிறது.

அதை தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘த்ரிஷ்யம் 2’. த்ரிஷ்யம் முதல் பாகத்தின் தொடர் பாகமான வெளியான இப்படம் தேசியளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இதனுடைய அடுத்த பாகம் தொடர்பாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்துள்ளது. அதன்படி அவர்களுடைய புதிய படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

12-த் மேன் (பன்னிரெண்டாம் ஆள்) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ஜீத்து - மோகன்லால் கூட்டணியில் உருவாகிவரும் ‘ராம்’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படபிடிப்பு லண்டனில் நடைபெற இருக்கிறது. இதில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web