என் மகள் தீபா வெங்கட் நலமாக உள்ளார்- வதந்திக்கு தாயார் முற்றுப்புள்ளி..!

 
தீபா வெங்கட் தாயாருடன்

பிரபல தொலைக்காட்சி நடிகையும், டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் திடீரென மரணமடைந்துவிட்டதாக வெளியான செய்திக்கு அவருடைய தாயார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

90-களின் மத்தியில் சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக இருந்தவர் தீபா வெங்கட். இவர் நடித்த பல்வேறு சீரியல்கள் வரவேற்பை குவித்ததை அடுத்து தொலைக்காட்சி ரசிகர்களிடமும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு உருவானது.

திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்ட அவர், பிரபல பண்பலை அலைவரிசையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதனுடன் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளுக்கு டப்பிங்கும் பேச தொடங்கினார்.

சிம்ரன், அனுஷ்கா, நயன்தாரா என பல்வேறு நடிகைகளுக்கு அவர் டப்பிங் பேசி வருகிறார். குறிப்பாக முதன்முறையாக ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு டப்பிங் பேசினார். அந்த படம் துவங்கி தற்போது வெளியான அவருடைய சமீபத்திய படங்கள் வரை தீபா வெங்கட் தான் பேசி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர் உயிரிழந்துவிட்டதாக நேற்று காலை முதலே தகவல் பரவியது. இதுதொடர்பாக பிரபல செய்திதாளுக்கு பதிலளித்துள்ள அவருடைய அம்மா, தன் மகள் நலமாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அவர் தான் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். யார் இப்படிப்பட்ட தகவல்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று காலை முதல் தொலைப்பேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லி மாய்ந்துவிட்டது. தயவு செய்து வீண் வதந்திகளை பறப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 
 

From Around the web