நாங்க சூர்யா பக்கம்... இயக்குநர் வெற்றிமாறன் ட்வீட்!

 
1

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படம் ரசிகர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் சூர்யாவுக்கு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் அனுப்பினார்.

இதற்கு நடிகர் சூர்யா உரிய பதிலளித்தார். ஆனாலும், பாமகவினர் சூர்யாவை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறனும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், “பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஞானவேலின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர் முயற்சிகளும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. இந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் மத்தியில் இந்தப் படங்கள் கோபத்தை ஏற்படுத்துவது இயல்பே.

நாங்கள் சூர்யாவின் பக்கம் நிற்கிறோம். சமூகத்தில் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் கேள்வி கேட்கும் எந்தவொரு படைப்புமே சமூக நீதிக்கான ஆயுதம்தான். ஜெய் பீம் படக்குழுவிற்கு நாங்கள் எப்போதும் துணையாக நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


 

From Around the web