வெற்றி கூட்டணியுடன் மீண்டும் கைக்கோர்க்கும் நயன்தாரா..!!

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நயன்தாரா புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகருடன் மீண்டும் அவர் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகிறது.
 
nayanthara

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘இறைவன்’ மற்றும் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகும் ‘ஜவான்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் மட்டுமே நயன்தாரா நடித்து வருகிறார். குறிப்பாக ஜவான் படத்தின் ஷூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனால் அவர் அவ்வப்போது மும்பைக்கு சென்று நடித்துவிட்டு வருகிறார். இறைவன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஷூட்டிங்கும் விரைவில் முடிவடைந்து, படம் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. 

இவ்விரு படங்களை முடித்துவிட்டு ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் இணைகிறார் நயன்தாரா. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nayanthara and jai

இந்நிலையில் நயன்தாராவின் 75-வது படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவருடைய 75-வது படத்துக்கு வேறொரு கதை உறுதிசெய்யப்பட்டு இருந்தது. அந்த கதையில் நயன்தாரா ஒரு சமையலராக நடிக்கவுள்ளதாகவும், படத்துக்கு ‘அன்னபூரணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அந்த கதை டிராப் செய்யப்பட்டுவிட்டு, தற்போது நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கும் படத்தை, தனது 75-வது படமாக நயன்தாரா அறிவிக்கவுள்ளார். இந்த படத்தில்  சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதாநாயகனாக ஜெய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த ஜோடி ‘ராஜா ராணி’ படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்திலும் சத்யராஜ் நடித்திருந்தார். நயன்தாரா - ஜெய் - சத்யராஜ் உள்ளிட்டோரின் கூட்டணி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனால் நிலேஷ் கிருஷ்ணாவின் படமும் வரவேற்பு பெறும் என்கிற நம்பிக்கை நயன்தாராவிடம் எழுந்துள்ளது.
 

From Around the web