விக்னேஷ் சிவன், நயன்தாரா குலதெய்வக் கோயிலில் வழிபாடு- காரணம் இதுதான்..!!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேவுள்ள கிராமம் மேல வழுத்தூர். இங்குள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன், இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலாகும். ஏற்கனவே திருமணத்துக்கு முன்பு இக்கோயிலுக்கு வந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இந்நிலையில் கடந்தாண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மேலும் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகினர். இதையடுத்து குலதெய்வத்தை வழிபடுவதற்கு இருவரும் மீண்டும் மேல வழுத்தூர் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு வந்திருந்தனர்.
இதற்கான ஏற்பாட்டை ரவி என்பவர் செய்திருந்தார். இருவரும் காமாட்சி அம்மனுக்கு மாலை அணிவித்து, அபிஷேகப் பொருட்களை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் வளாகத்தில் இருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் தீபம் காட்டி வழிபாடு நடத்தினர்.
தங்களுடைய கிராமத்துக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வந்திருப்பதை அறிந்த மேல வழுத்தூர் கிராம மக்கள் கோயில் முன்பு கூடினர். இதனால் அந்த பகுதி பரபரப்பானது. இதனால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வழிபாடு நடத்தி வெளியே வரும் வரை கோயில் கதவு மூடப்பட்டது.
வழிபாடு முடிந்த வெளியே வந்த இருவரும் கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகிகளுக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோயிலுக்கு வந்து சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.