மணிரத்னத்தின் நவரஸா- ஒன்பது கதைகள்; ஒன்பது தலைப்புகள்..!

 
மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா

இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் ‘நவரஸா’ ஆந்தாலஜி படத்தின் ஒன்பது கதைகள் மற்றும் அவற்றின் தலைப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘நவரஸா’. இந்த படம் ஒன்பது கதைகளை உள்ளடக்கிய ஆந்தாலஜி படமாகும். மனிதனின் சினம், கருணை, செருக்கு, வெறுப்பு, அச்சம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு என ஒன்பது உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து இந்த படங்களுக்கான கதை உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்டு மாதம் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த வாரம் இதனுடைய டீசர் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதை முன்னிட்டு நவரஸா படத்தில் இடம்பெற்றுள்ள ஒன்பது கதைகளின் தலைப்பு மற்றும் கதாபாத்திரம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, பிரக்யா மார்டின் இணைந்து நடித்துள்ள படம் ‘கிடார் கம்பி மேலே நின்று’. இது காதல் என்கிற உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மூத்த இயக்குநர் வசந்த் இயக்கத்தில் டெல்லி கணேஷ், ரோகிணி இணைந்து நடித்துள்ள படம் ‘பாயாசம்’. இது கருணையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நகைச்சுவைக்கான படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யோகி பாபு, ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதிரி. இதை பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். இப்படம் அச்சம் என்கிற உணர்ச்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள் இந்த படத்துக்கு பீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் அரவிந்த்சாமி இயக்கத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ரவுத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ப்ராஜெக்ட் அக்னி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரதிந்தீரன் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த் பார்வதி நடித்திருக்கிறார்கள். இதற்கு இன்மை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சர்ஜுன் இயக்கத்தில் அதர்வா முரளி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு துணிந்த பின் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

From Around the web