மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இயக்குனர் அமீருக்கு நோட்டீஸ்..!

 
1

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். இதையடுத்து, ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.

இதையடுத்து, இயக்குனர் அமீருக்கு நோட்டீஸ் அனுப்பிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்கு 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த நோட்டீசையடுத்து, டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் நேரில் ஆஜரானார். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைக்கு பின் இயக்குனர் அமீர் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி இயக்குனர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 3 ஆண்டுக்கான வங்கி பரிவர்த்தனை, வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமீருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் உடன் தொழில் ரீதியில் கூட்டளியாக இணைந்தது எப்படி? என்ற விவரத்தையும் அமீரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கேட்டுள்ளது. அதேவேளை, விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தரும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு இயக்குனர் அமீர் இமெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குனர் அமீரின் அலுவலகம் உள்பட சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

From Around the web