ஓ.டி.டி. ரிலீஸுக்கு தாயாராகும் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்..!

 
மோகன்லால்
மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ படத்தை நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள சினிமாவில் இதுவரை தயாராகத மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’. மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், அசோக் செல்வன், பிரணவ் மோகன்லால், கல்யாணி ப்ரியதர்ஷன், சுஹாசினி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை ப்ரியதர்ஷன் உருவாக்கியுள்ளார்.

கொரோனா பேரிடருக்கு முன்னதாகவே இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால் கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் பெரும் நஷ்டத்தை சினிமா உலகம் சந்திக்க வேண்டி இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்கள் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகின. ஆனால் மரைக்காயர் போன்ற பெரும் பொருட்செலவில் உருவான படங்கள் திரையரங்க வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்தன.

நாட்டில் பல்வேறு பகுதிகள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டாலும், கேரளாவில் அதனுடைய பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இன்னும் அங்கு கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்குகள் தொடர்கின்றன. திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் மரைக்காயர் படக்குழு கடும் பிரச்னையை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக படத்தை நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ. 100 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மலையாளம், தமிழில் நேரடியாகவும் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டும் வெளிவரவுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது ‘மரைக்காயர்: அரப்பிக்கடலின் சிங்கம்’ படத்துக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web