அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!

 
1
இலங்கையில் கூட 100 நாட்களை கடந்து ஓடிய படம் எம்ஜிஆரின் நூறாவது படமான 'ஒளிவிளக்கு' .

ஆனால் சென்னையில் இப்படம் நன்றாக ஓடவில்லை. நூறாவது படம் என்பதால் மினிமம் கேரன்டி வேண்டும் என்பதற்காக இது இந்தியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது. சிவாஜியின் 'நவராத்திரி' என்னதான் இன்று ஒரு க்ளாஸிக் படமாக மதிக்கப்பட்டாலும் கூட அது வெளியானபோது வெற்றியை பெறவில்லை. கமலின் நூறாவது படம் 'ராஜபார்வை' அடைந்த தோல்வியை பற்றி நான் தனியாக எழுத வேண்டிய அவசியமில்லை. ரஜினியோ தனது நூறாவது படம் ராகவேந்திரரை பற்றிதான் இருக்கவேண்டும் என்று வேண்டி விரும்பி செய்து தோல்வியை தழுவினார். ஆனால், தனது மற்ற எந்தப் படத்தையும் விட மிகப்பெரிய வெற்றிப்படமாக தனது நூறாவது படத்தை தந்த ஒருவர் இருக்கிறார்.

விஜயகாந்த். 

1984-ல் இவர் கதாநாயகனாக நடித்த 18 படங்கள் வெளியானது. இந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. முறியடிப்பதும் கடினம். 'சட்டம் ஒரு இருட்டறை' என்கிற எஸ்.ஏ.சந்திரசேகரின் படத்தின் மூலம் புகழின் உச்சியை எட்டிய விஜயகாந்த் நடிக்க வரலாம் என முடிவு செய்தது என்னவோ ரஜினியை பார்த்துதான். அதனாலேயே இவர் பெயரிலும் காந்த் ஒட்டிக்கொண்டது. மதுரையில் பிறந்த விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்திய ஆச்சரியங்களும், சகாப்தமும் கமல், ரஜினியே செய்ய முடியாதவை. ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த இவரது அசுர வளர்ச்சியை இப்போது யோசித்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். 

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!

விஜயகாந்தின் முகம் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான முகம். எல்லா நடிகருக்கும் அப்படி இயல்பாக அது அமைந்துவிடாது. குறிப்பாக ஆத்திரம் கொண்டு வசனம் பேசும் காட்சிகளில் இயல்பாகவே விஜயகாந்தின் கண்கள் சிவக்க ஆரம்பித்துவிடும். அதற்கேற்றாற்போல் இவருக்கு படங்களும் அமைந்தது. உதாரணமாக 'சட்டம் ஒரு விளையாட்டு', 'உழவன் மகன்', 'ஊமை விழிகள்', 'பூந்தோட்ட காவல்காரன்', 'செந்தூரப்பூவே', 'புலன் விசாரணை', 'சத்ரியன்', 'மாநகர காவல்', 'பரதன்', 'சேதுபதி ஐபிஎஸ்', 'ஏழை ஜாதி' போன்ற பல படங்களை குறிப்பிடலாம். ஆனால் இதுமட்டுமே விஜயகாந்தின் பலம் இல்லை. 'வைதேகி காத்திருந்தாள்', 'நானே ராஜா நானே மந்திரி', 'அம்மன் கோவில் கிழக்காலே' போன்ற படங்களையும் வைத்துதான் விஜயகாந்தை நாம் எடைபோடவேண்டும்.

விஜயகாந்தை பற்றி பார்ப்பதற்கு முன் அவர் புகழ்பெற ஆரம்பித்த 1980-களின் தமிழ் சினிமா வரலாறை நாம் கண்டிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டும். புது அலை சினிமா என்கிற விஷயம் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எழும்ப ஆரம்பித்த காலகட்டம் அது. இயக்குநர்களின் கையில் சினிமா வந்து சேர்ந்தது. பாரதிராஜா தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமுக ஹீரோவை அறிமுகப்படுத்தி களத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். இதுபோக பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் என இன்னொருபுறம் தங்கள் ஆளுமையை நிரூபிக்கும் படங்கள் செய்துகொண்டிருந்தனர். அதிலும் புது நாயகர்கள் அறிமுகமாக தவறவில்லை. 

இப்படி ஒரு பெருங்கூட்டமே ஒரு பெரும்புரட்சியை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலத்தில்தான் ரஜினியும் கமலும் தங்களுக்கான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தங்களுக்கென ரசிகர்களை சம்பாதித்து முன்னணியில் இருந்தனர். இதுபோக சிவாஜியின் புதல்வர் பிரபு, வில்லனாக அறிமுகமாகி பாரதிராஜாவின் கைவண்ணத்தில் நட்சத்திரமான சத்யராஜ், அதுவரை இல்லாத அழகுடனும் அதனோடு சேர்ந்த நல்ல நடிப்பு திறமையையும் கொண்டிருந்த கார்த்திக், அறிமுகமான சிறிது நாட்களிலேயே பெண்கள் உள்ளம் கவர்ந்த ராம்கி, 1990-களின் ஆரம்பத்தில் கிடுகிடுவென வளர தொடங்கிய ராமராஜன், வெள்ளிவிழா நாயகன் என்கிற பட்டப்பெயர் கொண்ட மோகன் என விஜயகாந்துக்கு எல்லா முனைகளில் இருந்தும் போட்டி கடுமையாக இருந்தன.

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!

இரு துருவங்கள் என்று ஒன்று இருந்தால் அவர்களை ஈடுகட்டும் இன்னொருவரும் அதே நேரத்தில் இருப்பார் என்பதுதான் வரலாறு. அந்த வரலாறை மெய்ப்பிக்க விஜயகாந்த் இந்தக் கூட்டத்தின் நடுவே இருந்து முளைத்தார். விஜயகாந்தின் மிகச் சிறப்பான அம்சங்களில் முக்கியமானது, அவர் யாருடனும் நடிக்க தயாராய் இருந்தார் என்பதுதான். 'ஊமை விழிகள்' படத்தில் அவர் அறிமுகமாவதே இடைவேளைக்கு பிறகுதான். அப்போதுதான் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியிருந்த ஜெய்சங்கர், கம்யூனிச கருத்துக்களை வலியுறுத்தும் படங்களில் தொடர்ந்து நடித்து நல்ல பெயர் வாங்கி வைத்திருந்த சந்திரசேகர், புதுமுகம் அருண்பாண்டியன், முதன்முறையாக வில்லனாக நடிக்கும் ரவிச்சந்திரன் என பலர் நடித்திருந்த அந்த படத்தில் விஜயகாந்த் தனித்து தெரிவார். இன்றும் 'ஊமை விழிகள்' விஜயகாந்த் படம்தான். அந்த ஆளுமைதான் விஜயகாந்த்.

இதுபோக 'செந்தூரப்பூவே' படத்தை எடுத்துக்கொள்வோம். அட்டகாசமான ஆக்‌ஷன் படம் அது. ராம்கி என்கிற இளம் கதாநாயகன் நடித்திருந்த இந்த படத்தில் விஜயகாந்த் நோயால் பாதிக்கப்பட்டவராகவும், சற்று வயதான மனிதராகவும் நடித்திருப்பார். அந்நேரத்தில் இப்படி தொடர்ச்சியாக 'ஊமை விழிகள்', 'செந்தூரப்பூவே', 'பூந்தோட்ட காவல்காரன்' போன்ற படங்களில் நடிக்க தனி தைரியம் வேண்டும். அது விஜயகாந்திற்கு இருந்தது. அதையே பின்னர் 'செந்தூரப்பாண்டி', 'பெரியண்ணா' போன்ற படங்களில் விஜயகாந்த் மற்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்காக செய்தார். இவர் இவ்வாறு துணிந்து நடிக்க காரணம் அவர் தன்மீது வைத்திருந்த மிகப்பெரிய நம்பிக்கை.

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!

ரஜினிக்கு எல்லா இடங்களிலும் ரசிகர்கள் இருந்தார்கள். ரசிகர் மன்றங்கள் இருந்தன. கமல் பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் அவரது ரசிகர்கள் பெரும்பாலும் படித்தவர்களாகவும், நகரங்களில் வசிப்பவர்களாவும் இருந்தனர். அந்தவகையில் விஜயகாந்திற்கு கிராமத்து பக்கம் ஒரு மிக வலுவான ரசிகர் கூட்டம் அமைந்தது. இதை உணர்ந்த விஜயகாந்த் அவர்கள் ரசித்து பார்க்கும்படியான ஆக்‌ஷன் படங்களில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டார். ரஜினியின் படங்களிலும் சண்டைக்காட்சிகள் இருந்தாலும் கூட விஜயகாந்த் படங்களே ஒரு காலகட்டத்தில் ஒரிஜினல் ஆக்‌ஷன் படங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் சண்டைக் காட்சிகளுக்கு விஜயகாந்த் கொடுத்த முக்கியத்துவம். தனக்கென அதில் தனி ஸ்டைலை விஜயகாந்த் உருவாக்கினார். இதன் உச்சமாக நாம் 'கேப்டன் பிரபாகரன்' படத்தை கூறலாம்.

'கேப்டன் பிரபாகரன்' ஒரு ட்ரெண்ட் செட்டர் திரைப்படம். விஜயகாந்துக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கித் தந்த படமும் இதுதான். அதற்கு முழுமுதற் காரணம் லியாகத் அலிகானின் வசனமும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கமும்தான். 'புலன் விசாரணை' படத்தில் ஏற்கெனவே இந்த ஜோடி இணைந்து வெற்றியை கொடுத்திருந்தாலும் கூட 'கேப்டன் பிரபாகரன்' அதையெல்லாம் தாண்டிய ஒரு பெரிய பெயரைப் பெற்றது. காவல்துறை அதிகாரியாக நடிப்பது விஜயகாந்திற்கு புதிதில்லை. 'சத்ரியன்' போன்ற படங்கள் அவரை காவல்துறை அதிகாரி வேடத்திற்காகவே பிறந்தவர் போன்ற தோற்றத்தை உருவாக்கி தந்திருந்தது. மேலும் சத்ரியனும், புலன் விசாரணையும் சற்று இருட்டான பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள். ஆனால் 'கேப்டன் பிரபாகரன்' அப்படி அல்ல. மிகவும் வெளிப்படையாக சந்தனக் கடத்தல் வீரப்பனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, அன்றைய அரசியல் நிலவரங்களை வசனங்கள் மூலமாக நேரடியாக சாடிய ஒரு திரைப்படம். இதன்பின்னர் வந்த பல ஆக்‌ஷன் படங்களிலும் விஜயகாந்த் இந்த பாணியை தொடர்ந்தார்.

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!

ஏற்கெனவே பார்த்தது போல் திடீரென விஜயகாந்த் ஒரு மென்மையான பாத்திரத்தில் நடித்து நம்மை ஆச்சர்யமூட்டி விடுவார். நிறைய ஆக்‌ஷன் படங்கள் செய்துகொண்டிருந்தபொழுது அவர் திடீரென செய்த 'சின்னக் கவுண்டர்' அதிரிபுதிரி வெற்றியை பெற்றது. அதேபோல் 'என் ஆசை மச்சான்', 'கண்ணுபடபோகுதய்யா' போன்ற படங்களும் விஜயகாந்தின் பேரை காப்பாற்றியது. குறிப்பாக 'வானத்தை போல' திரைப்படம்... திரையிட்ட எல்லா இடங்களிலும் திருவிழாக் கோலம் பூண்டது. 'வல்லரசு' என்கிற ஆக்‌ஷன் படமும் கூட நன்றாக ஓடி விஜயகாந்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. ஆனால் இதன்பின்னர் வந்த 'வாஞ்சிநாதன்', 'நரசிம்மா' போன்ற படங்களின் படுதோல்வி விஜயகாந்த் படங்களின் மேலான நம்பிக்கையை குறைக்க தொடங்கியது.

இந்நேரத்தில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'ரமணா' வெளியானது. அதே வின்டேஜ் விஜயகாந்தை மீட்டுக்கொண்டு வந்த அற்புதமான படம் இது. அதுவரை விஜயகாந்தை கிண்டல், கேலி செய்துகொண்டிருந்த பலரையும் கூட புருவத்தை உயர்த்தவைத்த இந்த படம் விஜயகாந்தின் திரை வாழ்க்கையின் இறுதிநாட்களில் வெளிவந்த மிக முக்கியமான படம். கேப்டன் பிரபாகரனை போன்ற அட்டகாசமான வசனங்களும் உண்டு. சத்ரியனை போல நிதானமான, ஆனால் அழுத்தமான கதையும் உண்டு. அந்த வகையில் விஜயகாந்தின் முழு பரிமாணத்தையும் திரையில் காட்டிய ஒரு படமாக 'ரமணா'வை கூறலாம். இதன்பின்னர் வந்த 'பேரரசு' மற்றும் 'எங்கள் அண்ணா' மட்டுமே விஜயகாந்திற்கு சுமாரான வெற்றியை தந்த படங்கள். ரசிகர்களும் ஓரளவு இப்படங்களை ரசித்தார்கள். இதற்கு பிறகு விஜயகாந்தும் நேரடி அரசியலில் ஈடுபட்டு கட்சியை தொடங்க, தேர்தலில் ஈடுபட அதன்பின்னர் வந்த படங்கள் தோல்வியை தழுவின. முந்தைய வேகமும் பெருமளவு அவரிடம் குறைந்தது.

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!

விஜயகாந்தின் மிகப்பெரிய பலம் என்று நான் கருதுவது, அந்நேரத்தில் மிகப்பெரிய இயக்குநர்களாக அறியப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. 100 படங்கள் முடித்த பின்னர்தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் 'தமிழ்ச்செல்வன்' என்ற படத்தில் நடித்தார். அதேபோல் எத்தனையோ வாய்ப்புகள் தெலுங்கில் இருந்து வந்தும் அவர் தமிழை தவிர வேறெந்த மொழியிலும் நடிக்கவில்லை. தமிழில் மிகக்குறைவாக மதிப்பிடப்படும் இயக்குநர்களின் படங்களில் அதிக அளவில் நடித்த நடிகர்களில் விஜயகாந்த் முக்கியமானவர்.

இந்தியில் என்னதான் அமிதாப் பச்சனுக்கு நிறைய புகழ் இருந்தாலும் கூட அங்கே ஆக்‌ஷன் ஹீரோ என்றால் அது தர்மேந்திராதான். அப்படியேதான் தமிழிலும் ரஜினிகாந்த் என்கிற மகா மாஸ் நடிகர் இருந்தாலும் கூட ஆக்‌ஷன் படங்கள் என்றால் அது விஜயகாந்த்-தான். இந்த பெயரை சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் செய்த நற்பணிகள் எல்லாம் அவரால் மட்டுமே செய்ய முடிந்த விஷயங்கள். எம்.ஜி.ஆரின் சாயலை தன்னிடம் தக்கவைக்க இவர் முயன்றார் என்று ஒரு வாதம் இருந்தாலும் கூட தனிப்பட்ட முறையில் விஜயகாந்தால் நன்மை பெற்றவர்களே அதிகம்.

நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த விஜயகாந்தின் பண்பை பாராட்டாத ஆட்கள் சினிமாவில் மிகக் குறைவு. எப்படி பாலச்சந்தர் அழைத்தால் ரஜினியும் கமலும் ஓடோடிப்போய் நிற்பார்களோ, அப்படிதான் ராம.நாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகரன் போன்றவர்களின் அழைப்பை விஜயகாந்த் என்றும் மறுத்ததில்லை. வணிக ரீதியாக பல வெற்றிகளை கொடுத்ததால் மட்டுமே அதிகளவில் புகழ் பெறாத இந்த இயக்குநர்களின் செல்லப்பிள்ளையாக விஜயகாந்த் இருந்தார். இப்படி ஒரு பெரிய போட்டியின் நடுவில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் ஜெயித்தும் காட்டியவர் விஜயகாந்த். 'கேப்டன்' என்கிற பட்டம் இவருக்கு 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த பின்னர் கிடைத்திருக்கலாம். ஆனால் அதை தக்கவைக்கும் வண்ணம் உண்மையான கேப்டனாகவே இவர் பல சமயங்களில் செயல்பட்டார். பொறுப்பெடுத்து கொள்ளுதல் என்கிற விஷயம் மிகப்பெரியது. அது எல்லாருக்கும் நல்லபடியாக அமைவதில்லை. அதை சொந்த வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி மிகச்சரியாக செய்து காட்டினார் விஜயகாந்த். இந்திய அரசின் சிறந்த குடிமகன் விருதை பெற்ற இவரை பற்றிய இந்தக் கட்டுரை இவரின் பெருமைகளுக்கு முன்னால் மிக மிகச் சிறியது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.

*** ஒவ்வொருவராய் அலசுவோம் ***

- பால கணேசன், கட்டுரையாளர்

From Around the web