இனி திரைப்படம் வெளியாகி 2 மாதங்களுக்கு பிறகே ஓடிடி ரிலீஸ்..!

 
1

திரைப்படம் வெளியாகி 4 வாரங்களுக்குப் பின் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறோம். இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் சிறிய படங்களை ஓடிடியிலேயே பார்க்க அதிகம் ஆர்வம் கொள்கின்றனர் .

இதனால் ஓடிடி வெளியீட்டை 4 வாரங்களில் இருந்து 8 வாரமாக மாற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளோம் என திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது :

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக இன்று பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது .திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த 4 மாதங்களாக சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஓடிடி தான் .இந்தியாவில் வெளியாகும் இந்திப் படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகு தான் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. ஆனால் தமிழ் படங்களை தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் புரிதலின் அடிப்படையில் 4 வாரங்களுக்குப் பின் ஓடிடியில் வெளியிட்டு வருகிறோம்.

இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் சிறிய படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என்று முடிவுக்கு வருகின்றனர் .

இதனால் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பேசி ஓடிடி வெளியீட்டை 8 வாரமாக மாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் அதிக அளவில் வருவதை ஊக்கப்படுத்த சிறு படங்களுக்கான டிக்கெட் விலையை குறைப்பது குறித்து தயாரிப்பாளர்களுடன் பேசி முடிவெடுப்போம்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் சிறு படங்களை பார்க்க மக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

From Around the web