விமல் நடிப்பில் வெளியான ‘சார்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
போஸ் வெங்கட் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான படம் ‘சார்’.இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வி அனைவருக்கும் சமமான ஒன்று என்றும் ஆழமாக இப்படம் கூறியிருந்தது.
மாங்கொல்லை ஊரில் 1960 முதல் 1980கள் வரை நடைபெற்ற கதையாகத்தான் இந்த படம் விரிகிறது. ஞானம் கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார். அவருடைய தாத்தா கட்டிய பள்ளியை அவருடைய அப்பா நடுநிலை பள்ளியாக மாற்றுகிறார். அந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றி ஞானம் அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கொடுத்து வருகிறார். ஆனால், ஆதிக்க சாதியை சேர்ந்த தலைவர் ஜெயபாலன் அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைத்து விட்டால் நமக்கு அடிமைகளாக இருக்க மாட்டார்கள் என்கிற நோக்கத்துடன் கடவுளின் பெயரை பயன்படுத்தி அந்த பள்ளிக் கூடத்தையே இடிக்க சதித்திட்டம் தீட்டுகிறார். அதை செய்யவிடாமல் விமல் தடுத்தாரா இல்லையா? அந்த ஊர் மக்களுக்கு கல்வி கிடைத்ததா? இல்லையா? என்பது தான் 'சார்' படத்தின் கதை.
இந்நிலையில், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம் வரும் 6ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.