ஸ்டண்ட் கலைஞர் மரணம் குறித்து பா. ரஞ்சித் வேதனை!

'வேட்டுவம்' என்ற படத்தினை இயக்கி வருகிறார் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடைசியாக 'தங்கலான்' ரிலீசானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
'வேட்டுவம்' படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.
அவரின் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் ஜுலை 13 ஆம் தேதி அன்று நடைபெற்ற வந்த வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நீண்ட காலமாக பணியாற்றியவரும், திறமையான சண்டைக் கலைஞருமான திரு. மோகன் ராஜ் அவர்களை எதிர்பாராத விதத்தில் நாங்கள் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள் குடும்பம் மற்றும் உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் என அவரை அறிந்த அனைவரையும் எப்படி தேற்றுவது என தெரியாமல் எங்களின் உள்ளம் கலங்குகிறது.
எப்போதும் போலவே தெளிவான திட்டமிடலுடன் கிராஷ் காட்சியை எடுக்க தயாரானோம். வேண்டுதல்கள், வாழ்த்துக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்துமே இருந்தது. சண்டைக்காட்சிகளை செயல்படுத்துவதில், திட்டமிடுவதில் நேர்த்தியும் தெளிவும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதல் மற்றும் எங்களின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் உடைய விளக்கமான திட்டமிடலையும் பாதுகாப்பு தயாரிப்புகளையும் தவறாமல் பின்பற்றினோம். அறிவுரைகளை பெரிதும் மதித்தோம்.
ஆனால் அண்ணன் மோகன் ராஜ் உயிரிழப்பில் ஆந்த நாள் முடிந்தது எங்களை தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் தன்னுடைய ஸ்டண்ட் குழு, எங்களது டீம் என அனைவருடைய அன்பையும், மரியாதையும் பெற்றவர். செழுமையான அனுபவம் மற்றும் சாதனைகளை கொண்டு தனது நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, இயக்குனர்களை, ஸ்டண்ட் வீரர்களை பெருமைப்படுத்தியவர் அண்ணன் மோகன் ராஜ்.
என்றென்றும் அவருக்கு எங்கள் ஒவ்வொருவரின் அன்பும், மரியாதையும், வந்தனங்களும் சமர்ப்பணம். எங்கள் அனைவரையும் உலுக்கியுள்ள பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் மறைவுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
அனைவர் மத்தியிலும் ஆகச்சிறந்த சண்டை கலைஞராக அறியப்பட விரும்பிய அவரை அப்படியே என்றும் எங்களின் நினைவில் போற்றுவோம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் சார்பில் இந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்யா நடிப்பில் உருவாகி வருவது 'வேட்டுவம்'. இப்படத்தில் ஷுட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்ட சமயத்தில் சமயத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா. ரஞ்சித், ஆர்யா கூட்டணியில் சார்பட்டா பரம்பரை வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையில் தான் தற்போது மீண்டும் 'வேட்டுவம்' படத்தில் இந்த காம்போ இணைந்துள்ளது. மேலும், இந்த படத்தில் கெத்து தினேஷ், அசோக் செல்வன் உள்ளிட்டோரும் நடித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.