இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசும் ஒத்த செருப்பு- பார்த்திபன் பெருமிதம்..!

 
இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசும் ஒத்த செருப்பு- பார்த்திபன் பெருமிதம்..!

தமிழில் புதிய முயற்சியாக தயாரிக்கப்பட்டு வெளியான ‘ஒத்த செருப்பு’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதை அடுத்து ஆங்கிலத்திலும் உருவாக்கப்படவுள்ளதாக ரா. பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கத்தில் அவர் மட்டுமே நடித்து வெளியான ‘ஒத்த செருப்பு’ படம் தமிழ் சினிமா ஆர்வலர்களிடம் பாராட்டுக்களை பெற்றது. வசூல் ரீதியாக பெரியளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும், நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான பிறகு இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உருவானது.

மொழி தெரியாதோர் கூட சப்டைட்டில் உதவியுடன் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு மத்திய அரசு இரண்டு தேசிய விருதுகளை அறிவித்தது.

தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுவருவது அனைவரும் அறிந்தது தான். ரா. பார்த்திபன் நடித்த வேடத்தில் நவாஸுதின் சித்திக் நடிக்கிறார். அதேபோல இந்த படம் ஆங்கிலத்திலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பார்த்திபன், ஒத்த செருப்பு படம் ஆங்கில ரீமேக்கிற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ரீமேக்கில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு புதிய முயற்சியாக பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘இரவின் நிழல்’. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web