பூர்ணா ஒரு நடிப்புப் பேய் –  இயக்குநர்  மிஷ்கின்..!

 
1

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நடிகர் ஆதித் அருண் பேசும் போது,

ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் இருக்கும் என்பது போல், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நம் பெயர் எழுதி இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஒரு படத்தின் பூஜைக்கு வந்திருந்த மிஷ்கின் சார் என் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது நீ என்ன செய்கிறாயோ அதை முழுமனதுடன் செய். அது உன்னைக் காப்பாற்றும் என்று சொல்லிவிட்டு சென்றார். அது முடிந்து இரு நாட்களில் என்னை படத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள்.  பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.  முகமூடி படத்தின் படப்பிடிப்பில்  மிஷ்கின் சார் கிரிக்கெட் விளையாடும் போது, அவருடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஆதித்யாவை எனக்கு ஒரு உதவி இயக்குநராக மட்டுமே தெரியும். அப்பொழுது ஏற்பட்ட நட்பு என்னை இன்று இந்த மேடையில் நிறுத்தியிருக்கிறது. தாயின் அன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரம், இரு மனிதர்களின் உறவு நிலைக்குள் இருக்கும் சிக்கலை இப்படம் பேசியிருக்கிறது. மைனாவில் இருந்து விதார்த் அவர்களை கவனித்து வருகிறேன்…  இனிது இனிது படத்தின் டப்பிங் வொர்க் போகும் போது, மைனா படத்தின் கலரிங் வேலைகள் அதே ஸ்டூடியோவில் நடந்து கொண்டு இருந்தது. அப்பொழுது எங்கள் இயக்குநர் விதார்த் அவர்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார். பூர்ணா ஒருநாள் வாந்தி எடுத்துவிட்டு தலைவலி என்று போய் படுத்துவிட்டார். அப்பொழுது அவர் மீது கோபப்பட்டேன். பின்னர் தான் அவர் கருவுற்று இருக்கிறார் என்று தெரிந்தது. அவரை பைக்கில் பின்னால் அமர்த்தி போகும் காட்சியில் பயமும் பொறுப்பும் அதிகமாக இருந்தது.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த மிஷ்கின் சார், ஆதித்யா சார் மற்றும்  தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை பூர்ணா பேசும் போது.

”நீங்கள் அளித்து வரும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. டெவில் எனக்கு ஒரு படம் மட்டும் இல்லை. அது எனக்கு வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்வுபூர்வமான விசயமாக மாறி இருக்கிறது. என்ன தான் படித்து முடித்தாலும் நம் கல்லூரி முதல்வரைப் பார்த்தால் பயமாக இருக்கும் அல்லவா…? எனக்கு அப்படித்தான் இப்பொழுது இருக்கிறது. மிஷ்கின் என் பிரின்ஸிபால். என்னை ஒரு தாயாக சவரக்கத்தி படத்தில் காட்டியது மிஷ்கின் மற்றும் ஆதித்யா சார் தான். இன்று நான் உண்மையாகவே ஒரு குழந்தைக்கு தாயாகும் போதும் இவர்களின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. மிஷ்கின் மற்றும் ஆதித்யா இருவரிடமும் அடிக்கடி சொல்வேன் உங்கள் படங்களில் சிறிய கேரக்டர் இருந்தாலும் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று. அதை இப்பொழுதும் கூறிக் கொள்கிறேன்.. விதார்த் உடன் நான் ஏற்கனவே நடித்திருக்கிறேன்… அருண் உடன் நடிக்கும் போது தான் எனக்கு என் வயிற்றில் குழந்தை வளர்ந்து வருவது தெரிய வந்தது.  ஆரம்பக்கட்டத்தில் இருந்து மிஷ்கின் அவர்களின் இசை நாட்டம் மற்றும் இசை புலமை குறித்து எனக்குத் தெரியும், பின்னணி இசை மட்டுமின்றி, பாடல்களின் இசை, அதன் வரிகளில் இருக்க வேண்டிய நுட்பம் என, அவரின் படங்களில் வரும் இசை தொடர்பான எல்லா விசயங்களிலும் முடிவுகளை அவர்தான் எடுப்பார். ஏனென்றால் அவருக்கு நல்ல இசையறிவு உண்டு. டெவில் படத்தில் வரும் பாடல்களுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்.  என் கணவரை குஷிப்படுத்த நான் அந்தப் பாடல்களை பாடவிட்டு ஆடத் துவங்கிவிடுவேன்..  அவர் இசையிலும் பெரிதாக சாதிப்பார் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

நடிகர் விதார்த் பேசும் போது,

”மிஷ்கின் சாருக்கு பெரிய நன்றி. சித்திரம் பேசுதடி படத்தின் வெற்றிக்குப் பின்னர் நான் கூத்துப் பட்டறையில் இருந்து கால் செய்து வாழ்த்து தெரிவித்தேன்… அப்பொழுது இருந்து எப்பொழுதும் அவர் என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். இருக்கிறார். அது இன்று வரை மாறாமல் தொடர்கிறது. அவருடன் அல்லது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீகாந்த் சார் மற்றும் மிஷ்கின் சாருக்கு நன்றி. என்னை மிக அழகாக திரையில் காட்டிய ஒளிப்பதிவாளர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி.  ஜன்னலோரம் படத்தில் ஏற்கனவே பூர்ணாவுடன் நடித்திருக்கிறேன். எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருப்பார். திறமையான நடிகை. ஜன்னலோரம் படத்தில் அவருக்காக ஏங்கிக் கொண்டு இருப்பேன். சேர முடியாமல் போய்விடும் இப்படத்தில் எங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹரி சாருக்கு நன்றி. இப்படி ஒரு அழகான படத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு. ராதாகிருஷ்ணன் சாருக்கும் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி கூற விரும்புகிறேன்.

மிஷ்கின் சார் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர் இசையமைத்த முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பின்னணி இசையமைக்கும் போது அதைப் பார்ப்பதற்கும் என்னை அனுமதித்தார். அதற்கும் நன்றி. என் நடிப்பு இப்படத்தில் பேசப்பட்டால் அதற்கு முழு காரணம் இயக்குநர் ஆதித்யா அவர்கள் தான்.  நெருக்கமான பாடல் காட்சிகளில் அவர் சொல்லிக் கொடுத்ததில் பாதி கூட நானும் அந்த நடிகையும் நடிக்கவில்லை என்பது தான் உண்மை. அவருக்குள் மிக அற்புதமான நடிகன் இருக்கிறான். டெவில் திரைப்படம் ஒரு நல்ல திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என்றார்.

படத்தின் இயக்குநர் ஆதித்யா பேசும் போது,

வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள், மாதா பிதா குரு தெய்வம், என்பார்கள். படத்தின் மீதான ஆர்வத்தையும் துடிப்பையும், அதன் மீது இருக்க வேண்டிய நேர்மையையும் என் குருநாதர் மிஷ்கின் சாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. அவருக்கு அடுத்ததாக இன்று வரை என்னை சவரக்கத்தி படத்தின் இயக்குநராக அறிய வைத்தது பத்திரிக்கை நண்பர்களின் எழுத்துதான்.  அவர்களுக்கு நன்றி.

Thanuramn என்கின்ற புத்தகத்தை  Land Markல் அண்ணன் வாங்கிக் கொடுத்தார்., அதைப் படிக்கும் போது, அதில் ஒரு அற்புதமான கரு இருப்பது புலப்பட்டது. அதை வைத்துக் கொண்டு மாத்திரம் ஒரு கதை செய்துவிட முடியாது, அதை மீறி அக்கதையில் ஒரு விசயம் தேவை என்று தேடிக் கொண்டு இருக்கும் பொழுதுதான், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி-யின்  ”ஒளிக்குப் பிறகு இரவுக்கு அப்பால்” புத்தகத்தினை படித்தேன்.  கலைஞர்கள்  எப்போதுமே சமூகத்தை மேம்படுத்தி சிந்திக்க வைப்பார்கள்.  அந்த சிந்தனை அக்கதையில் இருந்தது. அதை வைத்து ஒரு கதையினை உருவாக்கத் துவங்கினேன். அப்பொழுது ஊரடங்கு என்பதால் படித்துக்  கொண்டே இருந்து அக்கதையை தயார் செய்தேன். ஞானசேகர் சார் போன் செய்து ஏதாவது கதை இருக்கிறதா.. படம் பண்ணலாமா என்று கேட்டார். இந்தக்  கதையை கூறி டைட்டில் டெவில் என்று சொன்னதும் அட்டகாசம் சார்… படம் ஹிட் என்று ஊக்கம் தந்தார்.

மிஷ்கின் சாரிடம் இருந்து கற்று கொண்டது, ஒரு சினிமா பார்வையாளனிடம் என்ன செய்யும் என்பதைக் தான்.. கேளடி கண்மணி, படத்தில் அந்த தலையனையில் இருக்கும் காற்று வெளியேறும் போதும், நந்தலாலா மனப்பிறழ்வு அடைந்த ஒருவன்  குழந்தையின் தாயை அறையும் போதும்,, பூவே பூச்சுடவா படத்தில் அந்த காலிங்பெல்லை அந்தப் பாட்டி, பேத்தியின் இறப்புக்குப் பின் மீண்டும் மாட்டும்  போதும் நெஞ்சில் தைக்கும் உணர்வு இருக்கும்.

From Around the web