தளபதி பாணியில் குட்டி கதை சொன்ன பிரதீப் ரங்கநாதன்..!

‘டிராகன்’ திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் மிஷ்கின், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், "இந்த படம் அமைவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி, என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்ட கதாநாயகிக்கு நன்றி. ‘லவ் டுடே’ படத்தில் என்னுடன் நடிப்பதற்கு நிறைய நடிகைகள் தயங்கினார்கள். சிலர் தேதிகள் இல்லை என்றும் கதாபாத்திரத்திற்கான நடிப்பு குறைவாக இருக்கிறது என்றும் வித்தியாசமான காரணங்கள் கூறினார்கள்.
நான் பெரிய நடிகர்களோடுதான் நடிப்பேன் என சிலர் மட்டுமே உண்மையை கூறினார்கள். அவர்களுக்கு நன்றி. அப்படி இருந்த எனக்கு அனுபமா ஜோடி என்று இயக்குனர் சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. ‘ப்ரேமம்’ படம் வெளியான போதுநான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது இருந்தே எனக்கு அனுபமா பிடிக்கும். அதன் பின்னர் கயாடு என்னுடன் நடிக்கிறார். படம் வெளியாவதற்கு முன்னே அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
மிஷ்கின் சார் எனக்கு தினமும் பரிசு கொடுப்பார். என்னுடைய மேக்கப் மேனுக்கு பிறந்தநாளன்று கையில் இருந்த வாட்ச் கழற்றி கொடுத்துவிட்டார். அவர் பேசுவது யாருக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நான் மிகவும் என்ஜாய் செய்வேன். எனக்கு நீங்கள் கிடைத்தது மிக பெரிய பரிசு.
கெளதம் வாசுதேவ் மேனன் மக்கள் பார்ப்பது போலவே கிளாஸாக மாஸாக இருக்கிறார். அவர் நடிப்பதற்கு முன் அவருடைய தனி ஆளுமையைதான் பார்ப்பேன். கோமாளி படத்தில் கே எஸ் ரவிக்குமார் நடிக்கும் போது எனக்கு மிகவும் பயமாக இருக்கும். ஏனென்றால் அவர் மிக சீனியர். இப்போது அந்த பயம் இல்லை பாசம்தான் இருக்கிறது. அவர் எனக்கு ஒரு அப்பா மாதிரி இருக்கிறார்.
ஜார்ஜ் மரியம் படத்தில் பார்ப்பது போலவே மிக அப்பாவியானவர். எல்லோருடைய நடிப்பையும் அனுபவித்து பார்ப்பவர். கெஸ்ட் ரோலில் நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. விக்னேஷ் சிவனிடம் நான் அடிக்கடி தமிழ் சினிமாவில் நீங்கள் ஒரு சிறந்த பாடலாசிரியர் என்று கூறுவேன்.
எனக்கு அவரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இந்த படத்திற்கு ரைஸ் ஆப் தி டிராகன் பாடல் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தில் எங்களுக்காக யுவன் சார், சிம்பு சார் பாடல்கள் பாடியிருக்கின்றனர். இந்த பாடல் பாடியதற்கு சிம்பு சார் அவர்களுக்கு நன்றி. என்ன கிடைக்கும் என்று பார்க்காமல் என்ன கொடுப்போம் என்கிற அவரது தங்க மனசுக்கு நன்றி.
எனக்கு அஷ்வத் மாரிமுத்து நண்பனாக தெரியும், எழுத்தாளராக தெரியும். எனக்கு கண்டிப்பாக அவர் நல்லதைத்தான் செய்வான். ஏனென்றால் அவன் நண்பன், ஒரு நண்பன் நம்மை அடித்து சொல்வான், அன்பாக சொல்வான், ஆனால் நல்லதைத்தான் சொல்வான். இந்த நம்பிக்கையை தாண்டி அவர் எனக்கு என்ன சொல்லி கொடுத்தாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.
அரியர் வைப்பது மாஸ் இல்லை படித்தால் தான் மாஸ், படிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பது என்று முந்தைய மேடைகளில் நான் கூறியிருக்கிறேன். என்னுடைய அப்பா என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார். நான் படித்ததால் தான் எனக்கு ’கோமாளி’ என்ற படம் கிடைத்தது. நான் பள்ளியில் 98% , கல்லூரியில் 80% பெற்று IT யில் ஒன்றரை வருடம் வேலை செய்து அதன் பின்னர் விடுமுறை நாட்களில் குறும்படங்கள் எடுத்து, நிறைய புத்தகங்கள் படித்து, அதன் பின்னர் தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன்.
படிப்பு தான் முக்கியம் என்று இந்த படம் சொல்கிறது, சில பேர் முன்னாடி பேசி பின்னாடி சிரிப்பார்கள், ஆனால் அம்மா அப்பா தான் நமக்காக எந்நேரம் பார்த்தாலும் நல்லது நினைக்ககூடியவர்கள். நான் சில நாட்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். சில பேர் என்னை அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், அவர்கேளுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஒரு செடி வளரும் போது சில பேர் அதன் இலையையும் காம்பையும் உடைத்துவிட்டு செல்வார்கள், சில பேர் மிதித்துவிட்டு செல்வார்கள். ஆனால் அதே நேரத்தில் அந்த செடியின் வேர் கீழே வளர்ந்துகொண்டே வலுவாகிக்கொண்டு தான் இருக்கும். அந்த செடி மட்டும் இந்த வலியெல்லாம் தாங்கிக்கொண்டது என்றால் அது ஒரு பெரிய மரமாக வளருவதை யாராலும் தடுக்க முடியாது. அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றும் அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.