லோகேஷை தொடர்ந்து தனியாக யூனிவெர்ஸ் துவங்கும் பிரசாந்த் நீல்..!!
ஹாலிவுட் சினிமாக்களில் மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ், டிஸ்னி சினிமாடிக் யூனிவெர்ஸ் மிக பிரபலமாகும். அதாவது மார்வெல் தயாரிப்பு நிறுவனத்துக்கு என்று தனியாக சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். இவர்களை அந்நிறுவனம் தயாரிக்கும் எந்தவொரு படத்திலும் கொண்டு வரும். ஸ்பைடர் மேன், அவருக்கான படத்தில் மட்டுமில்லாமல் ஐயர்மேன் சம்மந்தப்பட்ட படங்களில் கூடு திடீரென எண்ட்ரி கொடுப்பார்.
இதுதான் சினிமாடிக் யூனிவெர்ஸின் கான்செப்ட். அதேபோன்று டிஸ்னி தயாரிப்பு நிறுவனமும், தன்னிடமுள்ள சூப்பர் ஹீரோக்களை தான் தயாரிக்கும் எந்த படங்களில் வேண்டுமானாலும் இடம்பெறச் செய்யும். இதே கான்செப்ட்டை எதார்த்த வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்தி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கட்டமைத்துள்ள பாணி தான் ‘எல்.சி.யூ’.
அவர் தனது படங்களில் தோற்றுவித்த கதாபாத்திரங்கள், லோகேஷ் இயக்கும் எந்த படத்திலும் வரலாம். விக்ரம் படத்தில் கைதியின் இடைச்செருகல் வந்தது போல. அவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் எல்.சி.யூ இடம்பெறுகிறது. அதனால் ’விக்ரம்’ கமல், ‘டில்லி’ கார்த்தி , ’ரோலெக்ஸ்’ சூர்யா போன்றோரை எதிர்பார்க்கலாம்.
லோகேஷின் இந்த பாணியை பிரபல கன்னட சினிமா இயக்குநர் பிரசாந்த் நீல் பின்பற்றவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘சலார்’ படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘கே.ஜி.எஃப்’ பட கதாபாத்திரங்கள் ராக்கி பாய் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ‘சலார்’ படத்தில் யஷ் கவுரவ வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘கைதி’, ‘விக்ரம்’ படங்களுக்கு எழுந்த வரவேற்பை பார்த்துவிட்டு, ‘சலார்’ படத்தில் கே.ஜி.எஃப் யஷ்ஷின் ராக்கி பாய் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாந்த் நீல் திரைக்கதை எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.