நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக இருந்த ’நிக் ஆர்ட்ஸ்’ எஸ்.எஸ். சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகத்தினர் பலர் இரங்கல் கூறி வருகின்றனர்.
 
ss chakaravarthi

நடிகர் அஜித் குமாருக்கு புகழை பெற்று தந்த வாலி, ராசி, வில்லன், சிட்டிசன், முகவரி, ரெட், வரலாறு போன்ற படங்களை தயாரித்தவர் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. அவர் அஜித் குமாரை வைத்து எவ்வளவு சம்பாதிதாரோ, அதை அனைத்தையும் அஜித் குமாரை வைத்து அடுத்தடுத்து அவர் தயாரித்த படங்களில் இழந்தார்.

அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா, ஜி போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன. இதில் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்தார். அந்த நேரத்தில் விக்ரமை வைத்து அவர் தயாரித்த காதல் சடுகுடு, சிம்புவில் நடிப்பில் வெளியான ‘காளை’ ஆகிய படங்களும் படுதோல்வி கண்டன.

இதனால் அவர் படம் தயாரிக்க முடியாமல் போனது. எந்த நடிகரும் அவருக்கு கைக்கொடுக்க வரவில்லை. தனது மகன் ஜானை வைத்து, அவர் தயாரித்த ‘ரேனிகுண்டா’ படம் பெரியளவில் வெற்றிப் பெற்றது. இதில் கொஞ்சம் மீண்டார். அதில் வந்த பணத்தை வைத்து மீண்டும் ஜானை வைத்து அவர் தயாரித்த ‘18 வயசு’ படம் படுதோல்வி அடைந்தது. இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். 

இறுதிகா எஸ்.எஸ். சக்கரவர்த்தி விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ என்கிற வலை தொடரில் நடித்திருந்தார். இதுவும் அவருடைய தயாரிப்பு என்று கூறப்படுகிறது. இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஓராண்டுக்கு முன்பு சக்கரவர்த்திக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 8 மாத காலமாக அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ்த் திரையுலகத்தினரை சோகமடையச் செய்துள்ளது. இன்று அவருடைய உடல் குடும்பத்தினர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் எஸ்.எஸ். சக்கரவர்த்தியின் தாயார் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web