”புலியே பதுங்குனா புஷ்பா வர்றான்னு அர்த்தம்” புஷ்பா 2 கிளிம்ப்ஸ் வெளியானது..!!
 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
 
 
pushpa 2 glimpse

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘புஷ்பா’. இந்த படம் தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. புஷ்பா படத்தின் அனைத்து பதிவுகளும் மெகா ஹிட்டடித்தன.

இந்நிலையில் புஷ்பாவின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. பல்வேறு கட்ட படப்பிடிப்புகளுக்கு மத்தியில், படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இதற்கிடையில் படக்குழுவுக்கும் இயக்குநர் சுகுமாருக்கும் இடையில் பிரச்னை உருவாகியுள்ளது. இதனால் புஷ்பா கிளிம்ப்ஸ் காட்சிகள் திட்டமிட்டப்படி வெளிவராது என தகவல்கள் பரவின. ஆனால் எந்தவிதமான இடையூறுமின்றி புஷ்பா இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தில் பெரியளவில் வளர்ந்த புஷ்பா, இரண்டாவது பாகத்தில் திருப்பதி மாவட்டத்தின் பெரிய டானாக மாறிவிடுகிறார். அவரை காணாமல் ஊரே தேடுகிறது. புஷ்பாவால் பயனடைந்த பலரும், “புஷ்பா எங்கே?”, “அவர் எங்கே போனார்?” என்கிற கேள்விகளுடன் பலரும் தேடுகின்றனர்.

கடைசியாக ஒரு காட்டில் இருக்கும் நைட் விஷன் கேமராவில், புலி ஒன்று பக்கத்தில் வருகிறது. கேமராவை நெருங்குகையில் புலி எதையோ பார்த்து அஞ்சி பின்வாங்குகிறது. அப்போது அந்த இடத்தில் தலையை துணியால் மறைத்துக்கொண்டு ஒருவர் கடந்து போகிறார். அந்த நபர் சட்டென திரும்புகையில் கேமராவில், அது புஷ்பா என்று தெரிகிறது. அத்துடன் கிளிம்ப்ஸ் காட்சிகள் நிறைவடைகிறது.

மிகவும் மிரட்டலான இந்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் புஷ்பா 2 கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளிவந்துள்ளது. இந்த படம் எப்போதும் வெளியாகும்? டிரைய்லர் வெளியீடு எப்போது இருக்கும்? உள்ளிட்ட கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து கமெண்டு செய்து வருகின்றனர்.

From Around the web