கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த புஷ்பா படக்குழு- ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்..!

 
கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த புஷ்பா படக்குழு- ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்..!

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘புஷ்பா’ படம் தொடர்பாக முக்கிய அப்டேட்டை வெளியிட்டு இன்பதிர்ச்சி அளித்துள்ளது படக்குழு.

கடந்தாண்டு பொங்கலுக்கு தெலுங்கில் வெளியான படம் ‘அலா வைகுந்தபுரம் லோ’. இந்தியளவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உருவானது. இதனால் படத்தின் ஹீரோவான அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு.

இதனால் தன்னுடைய அடுத்த படத்தை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கும் முயற்சியில் அவர் இறங்கினார். அதன்படி பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமாரின் ‘புஷ்பா’ படத்தில் நடிக்க அவர் ஆயத்தமானார். அதை தொடர்ந்து படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.

இதன்மூலம் ரசிகர்களிடையே படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. தேசியளவில் இந்த படத்தின் போஸ்டர் டிரெண்டிங்கானது. அதை தொடர்ந்து படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் முடிவில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் ஒரு நிமிட டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பதிவு செய்தது. மிகவும் மிரட்டலாக எடுக்கப்பட்டிருந்த டீசருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், கடத்தல்கார லாரி டிரைவர் வேடத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இந்நிலையில் புஷ்பா திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரா மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

தெலுங்கு ஊடகங்கள் பல இந்த படம் கேஜிஎஃப் தாக்கத்தில் உருவாக்கப்படுவதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. அதனால் இந்த படம் 2 பாகங்களாக வெளியாகிறது என தகவல்கள் கூறுகின்றனர். சுமார் ரூ. 250 கோடி செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் ஆகஸ்டு 13-ம் தேதி வெளியாகிறது. இதனுடைய 2-ம் பாகம் அடுத்த வருடம் வெளியாகிறது. 
 

From Around the web