சந்திரமுகி 2-வில் கங்கனாவுடன் சேர்ந்து பரதம் ஆடும் லாரன்ஸ்..!!
சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரணாவத் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
கடந்த 1993-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மணிச்சித்திரத்தாழு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதை பி. வாசு கடந்த 2004-ம் ஆண்டு ஆப்தமித்ரா என்கிற பெயரில் கன்னட மொழியில் ரீமேக் செய்தார்.
அந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து, 2005-ம் ஆண்டு ‘சந்திரமுகி’ என்கிற பெயரில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இதற்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.
பின் பெங்காளி, இந்தி என பல்வேறு மொழிகளில் இந்த கதை ரீமேக் செய்யப்பட்டு, அங்கேயும் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை 12 ஆண்டுகள் கழித்து இயக்குநர் பி.வாசு உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்திலும், கங்கனா ரனாவத் சந்திரமுகியாகவும் நடித்துள்ளார். தற்போது சந்திரமுகி 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தனது காட்சிக்கான ஷூட்டிங்கை முடித்துள்ளார் கங்கனா
அப்போது படக்குழுவினர் அவருக்கு கேக் வெட்டி ப்ரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராகவா லார்னஸ் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கங்கனா ரணாவத் சந்திரமுகி கெட்-அப்பில் உள்ளார். உடன் இருக்கும் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கெட்-அப்பில் உள்ளார்.
இதனால் இருவரும் சேர்ந்து பரதநாட்டியம் ஆடும் காட்சிகள் படத்தில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், லக்ஷிமி மேனன், ரவி மரியா, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் சந்திரமுகி 2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.