ருத்ரன் பட டிரெய்லர்- தமிழ் பாலைய்யாவாக மாறும் லாரன்ஸ்..!!
பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ருத்ரன்’. தமிழில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்த படம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் ருத்ரன் படத்தின் டிரெய்லர் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அதிரடி கதையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம், தெலுங்கு நடிகர் பாலைய்யா என்கிற பாலகிருஷ்ணாவின் படங்கள் போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிரெய்லர் துவங்கியதில் இருந்து, முடியும் வரை அதிரடி, சரவெடி, குத்து, கும்மாளம் தான். ஒரு காட்சி கூட சண்டையில்லாமல் இல்லை. பார்ப்பதற்கு ஒரு பக்கா தெலுங்குப் படம் போலவே இருந்தது. இவ்வளவு ஆக்ஷன் நெடி தமிழுக்கு ஒத்துவராது, வேண்டுமானால் தெலுங்கில் இந்த படம் ஓடும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆக்ஷனுக்கு பிறகு பஞ்ச் வசனங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. அதாவது “அந்த பூமிய படைச்ச சாமிடா நான்” என்கிற அளவுக்கு லாரன்ஸ் பேசுகிறார். எனினும், இந்த படத்துக்கு கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ருத்ரன் திரைப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.