ஜெயலலிதாவுடன் நான் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது - ரஜினிகாந்த் ஓபன் டாக்..! 

 
1

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.இந்த நாளில் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வந்த ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, இந்த வீட்டுக்கு நான் நான்காவது முறையாக வருகிறேன். ஜெயலலிதாவுடன் நான் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அப்போது ஜெயலலிதா என்னை வீட்டிற்கு அழைத்து பேசினார். இரண்டாவது முறை ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்திருந்தேன். அதன் பிறகு என் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன். இப்போது, நான்காவது முறையாக வந்து இருக்கிறேன். ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய நினைவுகளால் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்றார்.


ரஜினிகாந்த் அளித்த இந்த பேட்டி இணையத்தில் வைரலான நிலையில், ரஜினியும் ஜெயலலிதாவும் இணைந்து நடிக்க இருந்தார்களா? எந்த படத்தில் நடிக்க இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமானார்கள்.இதுகுறித்து ஜெயலலிதா 1980ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எனக்கு வந்த சில வாய்ப்புகளை நானே வேண்டாம் என சொல்லி தவிர்த்துவிட்டேன். பாலாஜி தாயரிப்பில், ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகி வாய்ப்பு எனக்கே முதன்முதலில் வந்தது என்பது உங்களில் பலருக்கும் தெரியாது.. நான் அதை வேண்டாம் என நிராகரித்த பிறகு தான், பாலாஜி அந்த கதாபாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாவை ஒப்பந்தம் செய்தார் என எழுதியிருந்தார்.
 

இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர் பாலாஜி, தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, இவ்வளவு பெரிய வாய்ப்பை நான் நிராகரிக்க முடியும் என்றால், மீண்டும் நடிப்பதற்கு நான் விரும்பவில்லை என்பதுதான் அர்த்தம் என எழுதி இருந்தார். ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டு நிராகரித்த திரைப்படம் தான் பில்லா. ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த அந்த படத்தில் ஸ்ரீபிரியா,பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வசூலில் சக்கைப்போடு போட்ட இந்த திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து அதே பெயரில் அஜித் மற்றும் நயன்தாரா, பிரபு, நமிதா,சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர்.

From Around the web