தமிழ் சினிமாவில் மகனை களமிறக்கும் ராஜ்கிரண்- ஃபேஸ்புக்கில் பெருமிதம்..!

 
தமிழ் சினிமாவில் மகனை களமிறக்கும் ராஜ்கிரண்- ஃபேஸ்புக்கில் பெருமிதம்..!

முப்பது ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தில் தன்னுடைய மகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக நடிகர் ராஜ்கிரண் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ராஜ்கிரண் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘என் ராசாவின் மனசினிலே’. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தின் மூலம் தான் முதன்முதலாக மீனா கதாநாயகியாக நடித்தார்.

இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதனுடைய இரண்டாவது பாகம் தயாராகவுள்ளதாக நடிகர் ராஜ்கிரண் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தை அவருடைய மகன் நைனார் முஹம்மது இயக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ராஜ்கிரண், இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள். ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.

ராஜ்கிரணின் பதிவுக்கு கீழே ‘என் ராசாவின் மனசினிலே’ படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல திரைத்துறையில் இயக்குநராக கால்பதிக்கும் அவருடைய மகன் நல்ல எதிர்காலம் பெற வேண்டும் எனவும் நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

From Around the web