ஆர்டிகள் 15 இயக்குநரின் புதிய படத்தின் டிரெய்லர் நீக்கம்..!!

இந்தி சினிமாவில் ‘முல்க்’ என்கிற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுபவ் சின்ஹா. அதை தொடர்ந்து ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அவர் இயக்கிய ‘ஆர்டிகிள் 15’ படம் தேசியளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படம் தாம் தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்கிற பெயரில் உதயநிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது.
ஆர்டிகிள் 15 படத்தை தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியாகும் படம் ‘பீட்’ (கும்பல்). ராஜ்குமார் ராவ், பூமி பெட்னேகர், அஷுதோஷ் ராணா, தியா மிர்சா, வீரேந்திர சக்சேனா, பங்கஜ் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 20-ம் தேதி வெளியாகவுள்ளதை அடுத்து, படத்தின் டிரெய்லர் யூ- ட்யூப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த பின், தற்போது யூ-ட்யூப் வலைதளத்தில் இருந்து அந்த டிரெய்லர் நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர், தாங்கள் வேலை செய்யும் ஊரிலிருந்து சொந்த ஊருக்கு சென்றனர். அதை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும் மோடி அரசின் கொரோனா ஊரடங்கு செயல்பாடுகளும் படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யூ -ட்யூப்பில் பீட் படத்தின் டிரெய்லர் பிரைவேட் மோடுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் பிரச்னைகளை குறித்து பேசுவதற்கு படைப்பாளிகளுக்கு உரிமை இல்லையா என்கிற கேள்விகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். எனினும் டிரெய்லர் வீடியோ நீக்கப்பட்டதற்கு பீட் பட தயாரிப்பு நிறுவனம் இதுவரை தன் தரப்பு விளக்கத்தை அளிக்கவில்லை.