ரஞ்சனா நாச்சியார் பேச்சு : எங்கள் குடும்பம் நேதாஜியை பின்பற்றும் குடும்பம்..! 

 
1

பஸ் டிரைவர்-கண்டக்டரை அவதூறாக பேசிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.

தினமும் மாங்காடு போலீஸ் நிலையத்தில் காலை, மாலை இரு வேளையும் கையெழுத்து போட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமினில் வெளியில் வந்த ரஞ்சனா நாச்சியார், நல்ல விஷயத்துக்காக கைதானதில் தப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட அவர் இதுதொடர்பாக அளித்த பேட்டி வருமாறு:-

பஸ்சில் மாணவர்கள் தொங்கிச் சென்றதை பார்த்ததும் வந்த கோபம் எனக்கு மட்டுமானது இல்லை. எல்லோருக்குமான கோபம் தான். உங்களுக்கும் அது போன்று கோபம் வந்திருக்கும். பஸ்களில் தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்களை பார்த்தால் எல்லா பெண்களுக்குமே கோபம் வரும்.

ஏதோ நான் மட்டும்தான் கோபப்படுவது போல சிலர் பேசுகிறார்கள். படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை பார்க்கும் பலர், கோபம் வந்தாலும் நமக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று நினைத்து சென்று விடுவார்கள். பஸ்சை ஓட்டிச்செல்லும் டிரைவருக்கும் கோபம் இருக்கும். கேட்க மாட்டார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. எல்லோருமே தப்பை தட்டி கேட்கணும். அதனால்தான் நான் கேட்டேன். ஒருவரை பார்த்து வேறு ஒருவர் கேட்கணும். அவரை பார்த்து இன்னொருவர் கேட்கணும் என்று நினைக்கிறேன்.

இந்த சம்பவத்துக்கு பிறகு போலீசார் என்னை கைது செய்த போது நல்ல விஷயத்துக்காக கைதானதில் தப்பே இல்லை என்று தான் நினைத்தேன்.

எங்கள் குடும்பம் காந்தியை பின்பற்றும் குடும்பம் இல்லை. நேதாஜியை பின்பற்றும் குடும்பம். மாணவர்களை தாக்கியது, கண்டக்டரை பேசியது பற்றி மட்டும் விமர்சிக்கிறார்கள். என்றைக்கு ஒரு ஆசிரியர் மாணவரை கண்டிக்கக் கூடாது. ஒரு போலீஸ் தப்பு செய்பவர்கள் மீது கை வைக்கக்கூடாது, பெற்ற தாய்-தந்தையே பிள்ளைகள் மீது கை வைக்கக்கூடாது என்று பேசி அதனை கடுமையாக்கினார்களோ, அன்றே பயம் போய்விட்டது.

அதனால்தான் இது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. இன்று நல்லதை செய்யப்போய் எனக்கு ஒரு நிபந்தனை தினமும் போலீஸ் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் கையெழுத்துப் போட வேண்டும். கட்டுப்பாடுகள் இருக்கும் வரைதான் தப்பு செய்ய பயப்படுவார்கள்.

இதுபோன்று படிக்காமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை தடுக்க மாணவர்களுக்கென்று தனி பஸ்சை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் தொங்கிக் கொண்டு சென்றதை பஸ்சில் யாரும் கண்டு கொள்ளவே இல்லை. நமது பிள்ளை இப்படி தொங்கிக் கொண்டு சென்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா? அதனால் தான் மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்டேன்.

பஸ்சில் தொங்கும் மாணவர்களிடம் சென்று செல்லப்பிள்ளை கீழே இறங்குடா. செல்லக்குட்டி கீழே இறங்குடா என்று சொல்லி பாருங்கள். ஒரு பையனும் கீழே இறங்க மாட்டான். தாய்மை உணர்வோடுதான் நான் இந்த செயலில் ஈடுபட்டேன். இதுபோன்ற உணர்வு எல்லா பெண்களுக்கும் வர வேண்டும். நமது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியிடம் இருந்துதான் இந்த கோபத்தை அனைவரும் கற்றுக்கொண்டிருக்கிறோம். கிராமப்புறங்களில் இருந்து சென்னையில் வந்து குடியேறியவர்கள் கூட தற்போது அந்த கோபத்தை வெளிப்படுத்த தவறுகிறார்கள்.

அடியாத மாடு பணியாது. 5-ல் வளையாதது 50-ல் வளையாது என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்ததை நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்தே போய் விட்டோம். உணவு பழக்க வழக்கங்கள் மாறி எப்படி பீட்சா, பர்கருக்கு மாறி விட்டோமோ அதே போன்று நமது சமூக பழக்க வழக்கங்களும் மாறிப் போய் விட்டது.

மாணவர்களை நான் அடித்தது தவறுதான். என்னைப் போன்று எல்லோரும் செயல்பட வேண்டும் என்று சொல்லவில்லை. குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்ட வேண்டாமா? நான் மாணவர்களை கண்டித்த வீடியோவை பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பார்த்திருப்பார்கள்.

இதன் பின்னர் பள்ளிக்கு செல்லும் மகனை பார்த்து ஏய் பஸ்சில் தொங்கிக்கிட்டு வராதடா? என்று ஒரு பெற்றோர் கூறினாலே போதும். படிப்படியாக அனைவரும் சொல்ல தொடங்கி விடுவார்கள்.

தப்பு செய்பவர்களை அடிப்பது தவறு என்று எப்போது பேசத் தொடங்கினோமோ? அப்போதே பயம் போய்விட்டது என்று தான் கூற வேண்டும். எனது செயலால் 2 மாணவர்களாவது இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தால் அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு ரஞ்சனா நாச்சியார் கூறினார்.

From Around the web