உகாதி நாளில் வெளியான காந்தாரா 2 அப்டேட்.!!

உகாதி பண்டியை முன்னிட்டு காந்தாரா 2 படத்துக்கான கதையை எழுத துவங்கியுள்ளதாக இயக்குநர் ரிஷப் ஷெட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதை ஹொம்பாலே ஃப்லிம்ப்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரீட்வீட் செய்துள்ளது. 
 
kantara 2

கடந்தாண்டு கன்னடத்தில் வெளியான ‘காந்தாரா’ படம் தேசியளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை பிராந்திய மொழிப் படங்களுக்கு கிடைக்காத ஒரு வரவேற்பை காந்தரா படத்துக்கு கிடைத்தது. பல்வேறு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை புரிந்தது. மேலும் உலகளவிலான சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் இந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் ரிஷப் ஷெட்டி அறிவித்திருந்தார். இது காந்தாரா படத்தின் முன்கதையை மையப்படுத்தி இருக்கும் என்றும் அவர் அப்போது ஊடகங்களிடம் கூறினார்.

இந்நிலையில் இன்று உகாதி பண்டிகையை முன்னிட்டு ரிஷப் ஷெட்டி, காந்தாரா 2 தொடர்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளார் அதன்படி ”இந்த நன்நாளில் காந்தாரா 2 படத்துக்கான கதை மற்றும் திரைக்கதை எழுதும் பணி துவங்கியுள்ளது. இயற்கையுடன் உங்களை தொடர்புப்படுத்தக் கூடிய கதையுடன், உங்களை மீண்டும் சந்திக்கவுள்ளோம். அதை நினைத்தால் இப்போதே மனம் பரவசமடைகிறது. மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்” என்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்


எதிர்பார்க்காத இந்த அப்டேட், படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஹொம்பாலே ஃப்லிம்ஸ் ட்வீட்டுக்கு கீழே பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை கமெண்டு செய்து வருகின்றனர். கடந்தாண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்த ‘காந்தாரா’ படம் வெறும் ரூ. 16 கோடியில் உருவாக்கப்பட்டு ரூ. 500 கோடி வசூல் சாதனை புரிந்தது. 

கே.ஜி.எஃப் படத்தை தொடர்ந்து காந்தாரா படம் மூலம் கன்னட சினிமாவுக்கான சந்தை மேலும் விரிவடைந்துள்ளது. தொடர்ந்து காந்தாரா 2  வெளியாகும் பட்சத்தில், அப்போது கன்னட சினிமாவின் மார்க்கெட், தெலுங்கு திரையுலகின் சந்தையை பின்னுக்கு தள்ளும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

From Around the web