ரூ. 1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ரைஸா- மானநஷ்ட வழக்கை காட்டி மிரட்டும் பைரவி..!

 
ரூ. 1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ரைஸா- மானநஷ்ட வழக்கை காட்டி மிரட்டும் பைரவி..!

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் விடுத்த ரைஸா இன்னும் மூன்று நாட்களில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பதிலுக்கு வேறொரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சரும நிபுணர் பைரவி செந்தில்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்று பியார் பிரேமா காதல், வேலையில்லா பட்டதாரி 2, வர்மா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ரைஸா வில்சன். தற்போது இவர் எப்ஐஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மருத்துவர் பைரவி செந்தில் என்பவரிடம் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள ஃபேஷியல் சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதற்கு பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்தில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு முகம் வீங்கியுள்ளது.

அதை தொடர்ந்து மருத்துவர் பைரவி மீது குற்றச்சாட்டை எழுப்பி வீங்கிப்போன தனது முகத்துடன் இன்ஸ்டாவில் பதிவிட்டார் ரைஸா. இதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில் மருத்துவர் பைரவிக்கு எதிராக நோட்டீஸ் விட்ட ரைஸா, ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

உடனடியாக தன்னை குறித்து தேவையற்ற அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ரைஸாவிடம் ரூ. 5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் பைரவி. மேலும் தன்னிடம் 3 நாட்களில் எழுத்துப்பூர்வமாக நடிகை ரைஸா மன்னிப்பு கேட்கவேண்டும். அதை சமூகவலைதளங்களில் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் பைரவி செந்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பும் மாறி மாறி நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகை ரைஸா வில்சன் தன்னுடைய உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், அதை தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது. 

From Around the web