திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது- சமந்தா அறிவிப்பு..!

 
நாக சைத்தன்யா மற்றும் சமந்தா

கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். கோவாவில் கிறிஸ்துவ மற்றும் தெலுங்கு முறைப்படி திருமண வைபவம் நடைபெற்றது.

கணவருடன் ஹைதராபாத்தில் குடியேறிவிட்ட சமந்தா, தொடர்ந்து படங்கள் மற்றும் வலை தொடர்களில் நடித்து வந்தார். மேலும் தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில், தனது பெயருடன் கணவர் வீட்டு பெயரான ‘அக்கினேனி’ சேர்த்துக் கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் சமந்தா அக்கினேனி என்று இருந்த பெயரை நீக்கிவிட்டு, ’எஸ்’ என்று மட்டும் அவர் வைத்துக் கொண்டார். அதை தொடர்ந்து சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

அதை தொடர்ந்து சமந்தா ஹைதராபாத்தில் தனியாக வசிப்பதாகவும், மாமனார் நாகர்ஜுனா கணவன் - மனைவிக்கிடையே சமாதானம் செய்த முயற்சித்ததாகவும், ஆனால் சமந்தா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பொதுவிழாக்களில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது சமந்தா -  நாக சைத்தன்யா இருவரும் மவுனம் காத்தனர். கோயில் வாசலில் நிருபர் ஒருவர் விவகாரத்து குறித்து கேட்டதற்கு அவரை நேரடியாக திட்டினார் சமந்தா. 

இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சமந்தா, எங்கள் இருவருடைய நலம் விரும்பிகளுக்கு நாங்கள் சொல்லிக் கொள்ல விரும்புவது என்னவென்றால், நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் சமந்தாவும் கணவன், மனைவியாக தொடரப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்.

இந்தக் கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். அனைவருக்கும் நன்றி” என்று சமந்தா பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் நாக சைத்தன்யாவும் இதே பதிவை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாக சைத்தன்யா மற்று சமந்தா இருவரும் பிரிவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வேதனையை எழுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும்,  பிரிவுக்கான காரணத்தை இருவரும் ஏன் தெரிவிக்கவில்லை என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

From Around the web