மிரட்டலான வில்லன் எண்ட்ரி- புதிய வீடியோவை வெளியிட்ட லியோ படக்குழு..!!

லியோ படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சய் தத் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு லியோ படக்குழு இன்பதிர்ச்சி அளித்துள்ளது. 
 
லியோ படக்குழு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், எதை பற்றியும் கவலைப்படாமல் படக்குழு புதிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளனர். 

அண்மையாக விஜய் நடித்து வரும் படங்கள் பெரியளவில் வெற்றி பெறாமல் உள்ளது. மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என அவருடைய படங்கள் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும், வியாபார ரீதியாக பெரியளவில் வசூல் குவிக்க தவறிவிடுகிறது. 

இதனால் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படம் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், இந்திய சினிமாவே பெரியளவில் எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மும்முரமாக நடந்து வருகிறது. ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கு தான் உள்ளனர்.

லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் சஞ்சய் தத்

லியோ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் இருப்பதால், ஒவ்வொருவராக தங்களுடைய காட்சி படமாக்கப்படும் போது காஷ்மீர் சென்று வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் நடித்து வரும் மிஷ்கின் தன்னுடைய காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டுவிட்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.


அவரை தொடர்ந்து கவுதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சஞ்சய் தத் காஷ்மீரில் நடந்து வரும் லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அதுதொடர்பான வீடியோவை படக்குழு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ், விஜய் மற்றும் சஞ்சய் தத்

சற்றும் எதிர்பாராத இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்களும், படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ரசிகர்களும் திக்குமுக்காடி போயுள்ளனர். விரைவில் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடிக்கப்பட்டு, படக்குழு சென்னை திரும்பவுள்ளதாகவும், அதை தொடர்ந்து 2 வார இடைவெளிக்கு பிறகு சென்னையில் லியோ படத்தின் அடுத்த ஷெட்யூல் துவங்கும் என தகவல்கள் கூறப்படுகின்றன.

From Around the web