வெப் தொடரில் கால்பதிக்கும் சரத்குமார்: ராதிகா அறிவிப்பு..!

 
இரை படக்குழுவுடன் சரத்குமார் மற்றும் ராதிகா

நடிகர் சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடரை அவருடைய மனைவி ராதிகா தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஓடிடி தளங்களுக்காக உருவாக்கப்படும் வலை தொடர்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

அந்த வரிசையில் விஜய் சேதுபதி, சூர்யா, அரவிந்த் சாமி, சாய் பல்லவி உள்ளிட்டோர் ஓடிடி தளங்களுக்காக தயாரிக்கப்படும் ஆந்தாலஜி படங்களில் நடித்துள்ளனர். இதனால் தொடர்ந்து வலை தொடர்களை தயாரிக்கும் ஆர்வம் தயாரிப்பாளர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.

இந்த வரிசையில் நடிகர் சரத்குமாரும் வெப் தொடர்களில் கால்பதிக்கவுள்ளார். இவர் நடிக்கும் வலை தொடரை மனைவி ராதிகா தயாரிக்கவுள்ளார். இரை என்ற பெயரில் உருவாகும் இந்த தொடரை ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காவனம், விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த தொடருக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். இதனுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்த தொடர் எந்த ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர் ராதிகா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web