#Saroja Devi SPL : கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி இந்த தமிழ் ஹீரோவோடு ஜோடியாக நடித்ததேயில்லையாம்..! ஏன் தெரியுமா ? 

 
1

"மகாகவி காளிதாசா" என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தை துவக்கிய நடிகை சரோஜாதேவி, தமிழில் நடிக்க கிடைத்த முதல் வாய்ப்பு பீம்சிங் இயக்கத்தில் 1958ம் ஆண்டு வெளியான "திருமணம்" என்ற திரைப்படம் தான், இந்த திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி தான் கதையின் நாயகி.

ஆனால் சரோஜாதேவி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி சென்றிருப்பர், அதன் பிறகு பி.ஆர். பந்தலூ இயக்கத்தில் வெளியான "தங்கமலை ரகசியம்" என்ற திரைப்படத்திலும் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நடிகைகள் டி.ஆர் ராஜகுமாரி மற்றும் ஜமுனா ஆகியோர் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மெல்ல மெல்ல திரை வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கப்பெற்ற நிலையில் 1958 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இயக்கி நடித்த "நாடோடி மன்னன்" என்ற திரைப்படம் இவருக்கு மாபெரும் திருப்புனையாக அமைந்தது.

அதன் பிறகு தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த சரோஜாதேவி மலையாள மொழியில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மக்கள் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் பல முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த சரோஜாதேவி, இறுதியாக தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஆதவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சுமார் 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து, 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக திரை அனுபவம் கொண்ட சரோஜாதேவி, இதுவரை ஒரு சூப்பர் ஹிட் நடிகருடன் ஜோடியாக நடித்ததில்லை என்பதுதான் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம். அந்த நடிகர் வேறு யாரும் அல்ல தமிழகத்தின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் அவர்கள் தான். 

ஜெய்சங்கர் அவர்களுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் சரோஜாதேவி நடித்திருக்கிறார் என்றபொழுதும், அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கருக்கு அவர் ஜோடி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சில வருடங்களுக்கு முன்பு மனம் திறந்து பேசிய நடிகை சரோஜாதேவி, ஜெய்சங்கர் மிக சிறந்த நடிகர், அவருடன் ஜோடியாக நடிக்காதது தனக்கு மாபெரும் வருத்தத்தை அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார். ஆனால் சரோஜா தேவி உச்ச நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வந்த நிலையில், ஜெய்சங்கர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் தன்னால் அந்த படங்களுக்கு கால் சீட் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது என்று கூறி அவர் வருத்தம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

From Around the web