‘ஜவான்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஷாருக்கான் பேச்சு!

 
1

‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ரூ.700 கோடி வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நயன்தாரா தனது தாயாரின் பிறந்தநாள் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று கூறி வீடியோ மெசேஜ் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

நிகழ்வில் பேசிய ஷாருக்கான், “கரோனா காரணமாக ‘ஜவான்’ படத்தை உருவாக்க 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பலரும் மும்பையில் தங்கி 4 ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் படத்துக்காக உழைத்தார்கள். பலரும் தங்கள் வீடுகளுக்குச் செல்லவேயில்லை. சிலருக்கு குழந்தைகள் இருந்தும் அவர்கள் மும்பையிலேயே தங்கியிருந்தனர்.

இயக்குநர் அட்லீயும் அதில் ஒருவர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மொழி புரியாவிட்டாலும் தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் படங்களுக்கு நான் ரசிகன். நல்வாய்ப்பாக தற்போது டப்பிங்கிலும், சப்டைட்டிலிலும் உங்களால் படங்களை பார்க்க முடிகிறது. ‘ஜவான்’ அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுகிறது. நேர்மையான ஒவ்வொரு இந்தியரும் ‘ஜவான்’தான்” என்றார்.

மேலும், அவரது 3 வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் படங்கள் குறித்து பேசுகையில், “நான் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்வேன். ஆனால் 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வரும்போது பதற்றம் இருந்தது. கடவுள் ‘பதான்’ படத்தில் கருணை காட்டினார். ‘ஜவான்’ படத்தில் இன்னும் அதிக கருணை காட்டினார். அடுத்து ‘டன்கி’ கிறிஸ்துமஸுக்கு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

From Around the web