ஷங்கர் இயக்கும் பான் இந்தியா படம்- 5 மொழிகளில் தயாரிக்க திட்டம்..!

 
ஷங்கர் இயக்கும் பான் இந்தியா படம்- 5 மொழிகளில் தயாரிக்க திட்டம்..!

இந்தியன் 2 படம் தொடங்கப்படுமா, இல்லையா என்று தெரியாத நிலையில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கான பணிகளில் இயக்குநர் ஷங்கர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

கொரோனா பிரச்னை, எகிறும் பட்ஜெட், படப்பிடிப்பில் ஏற்பட்ட மரணங்கள் என அடுத்தடுத்த காரணங்கள் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் பாதியிலே நிற்கிறது. இதை மீண்டும் தொடருவதற்கு கமல்ஹாசனும் முயலவில்லை, ஷங்கரும் முயற்சிக்கவில்லை.

அவர்கள் இருவரும் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறார் கமல். தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் பட வேலைகளை ஷங்கர் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தை முடித்துவிட முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இயக்குநர் ஷங்கரிடம் விளக்கம் கேட்ட பிறகு, இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளை தொடங்குவது குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கும் படம் பான் இந்திய படமாக உருவாகவுள்ளது. ஹீரோவாக ராம் சரண் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். எனினும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அவருடைய தந்தை சிரஞ்சீவி நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சல்மான் கானிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகிறது. அதனால் அந்தந்த மொழியில் பிரபலமான நடிகர்களை நடிக்கவைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
 

From Around the web