வைரலாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!
‘வண்டிச்சக்கரம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்ட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வரிசையில் நின்றனர்.
சில்க் ஸ்மிதா கவர்ச்சி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’, பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ போன்ற படங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஒரு கட்டத்தில் படங்களின் பாதி வசூலுக்கு காரணம் சில்க் ஸ்மிதா தான் என்கிற அளவிற்கு ஆளுமை செலுத்தினார். அன்று முதல் இன்று வரை சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இயக்குனர் ஜெயராம் இயக்கும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை எஸ்.பி. விஜய் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.