ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் மீண்டும் உயிர் பெற்ற பாடகி பவதாரணியின் குரல்..!
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் இன்று (ஜூன் 22) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சற்றுமுன் கோட் படத்தின் 2வது பாடலான ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலை நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பாடச் செய்துள்ளனர். பாடல் வரிகளைப் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
2வது சிங்கிள் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோட் படத்தின் 2வது பாடல் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த பாடல் பெங்களூருவில் வைத்து உருவாக்கப்பட்டது. இந்த பாடலை எனது தங்கை மருத்துவமனையிலிருந்து வந்தவுடன் பதிவு செய்யலாம் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை.பதிவு செய்வதற்குள் என் தங்கை இறந்து விட்டாள் என செய்தி வந்தது. பவதாரிணி குரலைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதன்படி இந்த பாடல் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த என்னோட டீம் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The second single from #TheGreatestOfAllTime is very special for me. Words cannot do justice to describe this feeling. When we were composing this song in Bangalore, @vp_offl & I felt this song is for my sister and at that time I thought to myself once she’s better and out of the…
— Raja yuvan (@thisisysr) June 22, 2024