‘யு’ சான்றிதழ் பெற தவறிய சிவகார்த்திகேயன் படம்..!

 
‘யு’ சான்றிதழ் பெற தவறிய சிவகார்த்திகேயன் படம்..!

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள ‘டாக்டர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய் ராய், யோகி பாபு, அர்ச்சனா, இளவரசு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மருத்துவத்துறை தொடர்பான பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துவிட்டன. இதனால் தமிழக ரசிகர்களிடையே டாக்டர் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா முதல் அலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் காரணமாக படத்தின் வெளியீடு மே 13-ம் தேதி ரம்ஜானுக்கு ஒத்திவைத்திருந்தனர்.

ஆனால் அதற்குள் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் அதிகரித்து வரும் இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் மூன்றாவது முறையாக ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தயாரிப்பு நிறுவனம் டாக்டர் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி ‘டாக்டர்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான படம் முதல், சமீபத்தில் வெளியான ஹீரோ வரை அனைத்து படங்களுக்கும் யு சான்றிதழ் மட்டுமே கிடைத்து வந்தன. ஆனால் முதல்முறையாக அந்த வழக்கத்தை மாற்றி யு/ஏ சான்றிதழ் பெற்ற சிவகார்த்திகேயன் படமாக ‘டாக்டர்’ மாறியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

From Around the web