மிஷ்கின் படத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா..!

 
மிஷ்கின் மற்றும் எஸ்.ஜே. சூர்யா

பிசாசு இரண்டாம் பாகத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற படம் பிசாசு. திகில் பின்னணியில் தயாரான படமாக இருந்தாலும், மாற்று திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்ததால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் உருவாக்கியுள்ளார். எனினும் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று அவர் கூறிவிட்டார். இந்த படத்தின் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் அடுத்து இயக்கவுள்ள படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மைனா பட புகழ் வித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

From Around the web