ஆந்திராவில் புதிய அவதாரம் எடுத்த சோனு சூட்- பாலாபிஷேகம் செய்து வணங்கும் மக்கள்..!

 
நடிகர் சோனு சூட் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்

ஆந்திராவில் நடிகர் சோனு சூட்டுக்கு பெரியளவில் கட் அவுட்டை நிறுவி, அதற்கு பாலாபிஷேகம் செய்து சமூக சேவையை தொடங்கியுள்ளனர் சித்தூர் மாவட்ட மக்கள்.

கொரோனா முதல் அலையின் போது பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ததன் மூலம் நடிகர் சோனு சூட்டுக்கு மக்களிடையே நல்ல மதிப்பு கிடைத்தது. பாலிவுட் படங்களில் வில்லனாக மட்டுமே நடித்து வந்த அவர், இதன்மூலம் அனைவருடைய மனங்களிலும் ஹீரோவாக நிலைத்து நின்றார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்போதும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவது, ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பி வைப்பது போன்ற பணிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.

சமூகவலைதளங்கள் மூலமாக கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் தெரிவிக்கும் புகாருக்கு உடனடியாக அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கும் முடிந்ததை செய்கிறார்.


சோனு சூட் காட்டி வரும் மனிதநேயத்தை பாராட்டும் வகையில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூர் மாவட்ட மக்கள், அவருடைய ஆளுயர மிகப்பெரிய கட் அவுட்டை நிறுவி, பாலாபிஷேகம் செய்து மாலைப்போட்டு வணங்கியுள்ளனர்.

மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவுவழங்குதல் உள்ளிட்ட சமூகப் பணிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். தவிர, இயன்றவர்களுக்கு உதவிட தாங்கள் தயாராக இருப்பதாகவும் அந்த மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தவர் சோனு சூட் என்று கூறி அவர்கள் பெருமை அடைகின்றனர்.

இந்நிலையில் சித்தூரில் சோனு சூட் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மக்கள் வணங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From Around the web