எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது -  உறுதி செய்த சுனைனா!

 
1

நடிகை சுனைனா தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து நகுலுடன் இணைந்து காதலில் விழுந்தேன் என்ற படம் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமான சுனைனா, முதல் படத்திலேயே தன்னுடைய க்யூட்டான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். இந்தப் படத்தில் நகுல் -சுனைனா ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக மாசிலாமணி என்ற படத்திலும் இந்த ஜோடி இணைந்தது. தமிழில் அடுத்தடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, வன்மம், தெறி, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, ட்ரிப், எஸ்டேட், ரெஜினா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சுனைனா. பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துவரும் சுனைனா, அழகு, நடிப்புத் திறமை என இருந்தும் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுக்க முடியாமல் இதனால் பட வாய்ப்புகளை பெற முடியாமலும் திணறினார். இவரது நநடிப்பில் கடைசியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரில் இவரது நடிப்பு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

இருந்த போதிலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முடியாமல் இருக்கும் சுனைனா தற்போது தன்னுடைய 35வது வயதில் தன்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய காதலரின் கை மீது கையை வைத்தபடி அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு பூட்டு எமோஜியையும் வெளியிட்டு ரசிகர்களை பல யூகங்களை செய்ய விட்டிருந்தார். தன்னுடைய திருமணம் குறித்து அறிவிக்காமல் இப்படி யூகத்திற்கு விட்டுவிட்டாரே என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சுனைனா. தற்போதும் தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிடாமல் மேலும் அவரது எந்தவித தகவல்களையும் வெளியிடாமல் தங்களது நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளதாக கூறி, மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தன்னுடைய கடைசி பதிவு குறித்து பல கட்டுரைகளை பார்க்க முடிந்ததாகவும், அதனால் தனக்கு நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெளிவு படுத்துவதாகவும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சுனைனா, அதை மிகவும் பெரிதாக நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web