’சூர்யா 42’ கங்குவா- படம் தான் புதுசு... பெயர் பழசு..!!

தமிழில் தொடர்ந்து வரலாற்றுப் படங்கள் உருவாகி வரும் டிரெண்ட் அதிகரித்து வருகிறது. பொன்னியின் செல்வன், யாத்திசை படங்களில் வரிசையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா, சிறுத்தை சிவா படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மாபெரும் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் ‘ஃபேண்டசி’ கதையமைப்பில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக தீஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சூர்யா 42 படத்தின் தலைப்பு இன்று காலை 9 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று சமூகவலைதளங்களில் ஸ்டுடியோ கிரீன் பக்கத்தில் ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு ப்ரோமோ வீயோவுடன் அறிவிக்கப்பட்டது. அதன்படி, படத்துக்கு ‘கங்குவா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படம் மொத்தம் 10 மொழிகளில் வெளிவருகிறது. அனைத்து மொழிகளுக்கும் பொதுவான டைட்டிலாக இது அமைந்துள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் ‘கங்குவா’ படத்தில் சூர்யா கதாபாத்திரம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுவரை கோவா, சென்னை அருகேவுள்ள எண்ணூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் கங்குவா படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதையடுத்து இலங்கை, ஜப்பானின் ஃபிஜி தீவு உள்ளிட்ட இடங்களில் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஒரு இந்திப் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் பெயர் ‘கங்குவா’ என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் “கங்குவா” என்பது தமிழ் வார்த்தை தானா? அல்லது வேறொரு மொழி கலப்பா? என்கிற விவாதம் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.