வாடிவாசல் படத்தில் ’டபுள் ஆக்ட்டு’ கொடுக்கும் சூர்யா..!

 
சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூரி, பவானி, விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்துக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கப்படவுள்ளன.

அதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குகிறார். இதை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்தாண்டு இறுதிக்குள் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வாடிவாசல் படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கும் விபரம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யா பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தந்தை மகனாக அவர் நடித்த வாரணம் ஆயிரம் படமும் அதில் ஒன்றாகும்.

மேலும் வாடிவாசல் ஏறுதழுவுதல் குறித்த கதை என்பதால், அதற்குரிய காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் பொருட்டு காளைகளை அடக்கும் பயிற்சியில் சூர்யா ஈடுபடவுள்ளார். அதற்காக இரண்டு காளைகளை வாங்கி வீட்டிலேயே அவர் வளர்த்து வருகிறாராம்.
 

From Around the web