இசையமைப்பாளர் தேவாவை கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்- ரஜினி வருத்தம்..!!
சென்னையில் கடந்தாண்டு இசையமைப்பாளர் தேவா இசைக்கச்சேரி நடத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, மீனா, மாளவிகா, தயாரிப்பாளர்கள் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய ரஜினிகாந்த், இசையமைப்பாளர் தேவாவின் சாதனைகளை தமிழ் ஊடகங்கள் எதுவும் சரியாக பதிவு செய்யவில்லை. முன்னாள் சிங்கப்பூர் அதிபர் நாதன் மறைந்தபோது, பொற்காலம் படத்திலிருந்து தேவாவின் தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலுடன் அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. தன்னுடைய இறுதிச் சடங்கு அப்படித்தான் நடக்க வேண்டும் என்று உயிலும் எழுதி வைத்தார்.
நாதனின் இறுதிச் சடங்கில் பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். அந்த இடத்தில் “தஞ்சாவூரு மண்ணெடுத்து” என்கிற தமிழ் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்தப் பாடலின் பொருளைத் தங்கள் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க தொலைக்காட்சி சேனல்களால் இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.இப்பாடல் குறித்து தெரிந்துகொள்ள உலகத் தலைவர்கள் மிகுந்த ஆர்வங்காட்டினர்.
ஆனால் இதுதொடர்பான எந்தவித தகவல்களையும் அப்போதிருந்த தமிழ் ஊடகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஒரு செய்தி கூட குறிப்பிடவில்லை. இப்படியொரு சம்பவம் நடந்ததை தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் தனது கருத்தை பதிவு செய்தார் ரஜினி. கடந்தாண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.