ஹிந்தியில் வரவேற்பை குவிக்கும் தமிழ் அசுரன் படம்..!
 

 
ஹிந்தியில் வரவேற்பை குவிக்கும் தமிழ் அசுரன் படம்..!

தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த அசுரன் படம் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸானதை அடுத்து அங்கும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியான படம் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தின் தனுஷ் இளைஞர் மற்றும் நடுத்தர வயதானவர் ஆகிய இரண்டு தோற்றங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

விமர்சகர்கள் வட்டத்திலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ‘நாரப்பா’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தவுடன் அந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் கவனமீர்த்த அசுரன் படம் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்தியிலும் அதே பெயரில் வெளியிடப்பட்ட இந்த படத்தை யூ-ட்யூப்பில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

இதனால் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு அசுரன் படம் வட இந்தியாவில் திரையரங்குகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படமும் இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வருகிறது.
 

From Around the web