ஆஸ்கர் விருது எதிரொலி: சம்பளத்தை ‘கிடு... கிடு...’ என உயர்த்தும் தெலுங்கு நடிகர்கள்...!!

இந்தியில் தயாராகும் படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜுன் தன் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளதுக்கு ஆஸ்கர் விருது தான் காரணம் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்துக்கு பிறகு தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது. குறிப்பாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் அனைத்தும் பான் இந்திய படங்களாகவே வெளி வருகின்றன. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் பெரியளவில் வெற்றி கொடுக்காவிட்டாலும், அவருடைய மார்க்கெட் என்பது உச்சத்தில் தான் உள்ளது.
பாகுபலியை தொடர்ந்து பான் இந்திய சந்தையை குறிவைத்து வந்த அடுத்த தெலுங்குப் படம் புஷ்பா. இதுவும் தரமான சம்பவத்தை செய்தது. படம் மட்டுமில்லாமல், பாடல்களும் எண்ணற்ற அளவில் வசூலை வாரிக் குவித்தன. புஷ்பாவின் முதல் பாகம் கொடுத்த அசுர வெற்றி, அதனுடைய இரண்டாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
ஏற்கனவே பாகுபலி கொடுத்த வெற்றியை தொடர்ந்து, பிரபாஸ் தனது சம்பளத்தை ரூ. 100 கோடியாக உயர்த்திவிட்டார். அடுத்தடுத்து அவருடைய படங்கள் தோல்வி அடைந்தாலும், சம்பளத்தை அவர் குறைக்கவில்லை. இந்த வரிசையில் தற்போது அல்லு அர்ஜுன் இணைந்துள்ளார்.
புஷ்பாவின் வெற்றியால் அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை சகட்டுமேனிக்கு அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியில் அவரை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம், அல்லு அர்ஜுனுக்கு ரூ. 125 கோடி சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இதன்மூலம் தெலுங்கில் அதிகளவு சம்பளம் பெறும் நடிகர் என்று பெருமை அல்லு அர்ஜுனுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று அமெரிக்காவில் ஆஸ்கர் விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு சிறந்த பாடலுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவிலேயே ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர் உள்ளிட்டவர்கள் தங்களுடைய சம்பளத்தை அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.