சுதாகர் நடிக்கும் 2வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் வீடியோக்களாக வெளியிட்டு பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். தற்போது இந்த யூடியூப் சேனலை 4.88 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சினிமாவை லட்சியமாக கொண்ட இருவரும் இணைந்து க்ரவுட் பண்டிங் முறையில் படம் ஒன்றை தயாரித்து வெளியிட திட்டமிட்டனர்.
இதற்காக ஃபண்ட்மெலன் செயலி மூலம் நிதி திரட்டினர். இதன்மூலம் பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக கூறப்பட்டது. பொது மக்களிடம் நிதி கிடைத்ததை அடுத்து, ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தாங்கள் தயாரிக்கும் படம் தாமதமாவதாகவும், விரைவில் இந்தப் படத்தை தொடங்குவோம் என இருவரும் தெரிவித்திருந்தனர். அந்தப் படத்தை கைவிட்டவர்கள் புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் இந்தாண்டு ஜனவரியில் தொடங்கியது.
தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.