பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் நோயை வென்ற கதை..!

ரட்சகன் படத்தில் ஹீரோயினாகவும் முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சுஷ்மிதா.
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அடிசன் நோய் என்ற ஆட்டோஇம்யூன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். நம் உடலுக்கு கார்டிசோன் என்ற ஹார்மோன் முக்கியத் தேவை. அதை அட்ரினல் சுரப்பி உற்பத்தி செய்து வழங்கும். இந்த நோய்த் தாக்குதலில் அட்ரினல் சுரப்பிகள் வேலை செய்வதை நிறுத்திவிடும்.
’உயிர் வாழ வேண்டுமானால், ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஹைட்ரோகார்டிசோன் என்ற ஸ்டீராய்ட் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என அவருக்கு மருத்துவர்கள் 2014-இல் அறிவுரை கூறினர். வாழ்க்கை முழுவதும் அந்த மருந்தை சார்ந்தே வாழவேண்டும்!
‘உயிருடன் இருக்க மருந்துகளை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்த சுஷ்மிதா. தேர்ந்தெடுத்த பாதைதான் முக்கியமானது, அதுதான் நமக்கான பாடம்.!
தான் எந்தளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்ட சுஷ்மிதா. வீட்டிலேயே முடங்கிப் போகவில்லை. யோசித்து யோசித்து நோயைப் பெருக்கிக்கொள்ளவில்லை. தன்னுடைய உடற்பயிற்சியாளரை அழைத்து ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளைக் கற்றுத்தரச் சொல்லி, பயிற்சி செய்யத் தொடங்கினார். மருத்துவர்கள் செய்யக் கூடாது என்ற சொன்ன, ஈர்ப்பு விசைக்கு எதிரான உடற்பயிற்சிகளையும் (anti-gravity movements) செய்தார். இது அவருக்கு நல்ல வகையில் பலனளித்ததாகவே சுஷ்மிதா. கூறுகிறார்.
உடலில் உள்ள நச்சுகள், தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றும் செயல்முறைகளையும் யோகா மற்றும் சில உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். இது அவர் உயிர்வாழ்வதற்கான வழிமுறையாக மட்டுமில்லாமல் மாற்றத்திற்கான ஒரு வழியாகவும் அமைந்தது.
வியந்துபோன மருத்துவர்
ஒருமுறை துபாய்நகரில் மயக்கமடைந்த சுஷ்மிதாவை அவசர சிகிச்சைக்காக அபுதாபிக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்து மீண்டும் துபாய் திரும்பினார். இந்நிலையில்தான் அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஒருவர், ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறினார். சுஷ்மிதாவை ஹைட்ரோகார்டிசோன் எடுப்பதை நிறுத்தச் சொன்னார். அவரது உடல் மீண்டும் தானாகவே கார்டிசோலை உற்பத்தி செய்யத் தொடங்கியதாக கூறினார். தன்னுடைய பல ஆண்டு அனுபவத்தில் நின்றுபோன அட்ரினல் சுரப்பி மீண்டும் வேலை செய்யத் தொடங்கியதைப் பார்த்ததே இல்லை என்று வியப்படைந்தார் மருத்துவர். பலமுறை சோதனை முடிவுகளைப் பார்த்தும் அவருக்கு நம்பமுடியவில்லையாம்!
அடிசன்ஸ் நோய் என்றால் என்ன?
அடிசன்ஸ் நோய் என்பது அரிதான ஆட்டோ இம்யூன் நிலை. இதில் அட்ரீனல் சுரப்பிகள் போதுமான அளவு கார்டிசால் மற்றும் ஆல்டோஸ்டிரோன் ஹார்மோன்களை உருவாக்கத் தவறிவிடுகின்றன. இதனால் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம், மோசமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை உருவாகும். இவை இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைத் தடுக்கின்றன. எனவே இந்த ஹார்மோன்கள் இல்லாததால் நோயாளி இதய பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.
உயிரைக் காப்பாற்றிய உடற்பயிற்சி
கடந்த 2023 ஆம் ஆண்டு சுஷ்மிதா சென் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த இதயநல மருத்துவர் , ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், சுஷ்மிதாவின் அதீத உடல் செயல்பாட்டினால் தான் அவருக்குப் பாதிப்பு குறைவாக இருந்ததாகக் கூறியிருந்தார்.
சுஷ்மிதாவை மருந்து மாத்திரைகள் அளவுக்கு உடற்பயிற்சியும் காப்பாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.