முடிவுக்கு வந்தது வலிமை படப்பிடிப்பு- அடுத்தது ரிலீஸ் தான்..!

 
வலிமை படத்தில் அஜித் குமார்
ரஷ்யாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், வலிமை படத்திற்கான ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘வலிமை’. சுமார் இரண்டரை ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு, ஒருவழியாக நிறைவடைந்துள்ளது. கொரோனாவுக்கு முன்னதாக வலிமை பட ஷூட்டிங் துவங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் கொஞ்சம் மெதுவாகவே நடந்தன.

அப்போது வில்லனாக வந்தது கொரோனா பரவல். இதன்காரணமாக படப்பிடிப்பு பணிகள் மேலும் தாமதமானது. முதல் அலை முடிந்தவுடன் பட ஷூட்டிங்கை முழுமையாக முடித்துவிட படக்குழு நினைத்தது. ஆனால் மீண்டும் ஆரம்பித்தது கொரோனா இரண்டாம் அலை. இதனால் வலிமை படப் பணிகள் மேலும் தாமதமடைந்தன.

இறுதியாக வெறும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே படமாக்கப்பட்ட சில காட்சிகளுக்கான கூடுதல் ஷாட்டுகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. ஒருவழியாக மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து வலிமை படக்குழு ரஷ்யா பறந்தது.

அங்கு ஒரு மாத காலம் நடத்தப்பட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பவுள்ளனர். ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. தற்போது ரஷ்யாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு மட்டும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது.

சென்னை வந்தவுடன் வலிமை படக்குழுவினர் அதற்கான பணிகளை துவங்கவுள்ளார். அதை தொடர்ந்து அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கான டப்பிங் பணிகள் நடக்கும். இதை தொடர்ந்து படத்தை வரும் அக்டோபர் நவராத்திரி விடுமுறை அல்லது தீபாவளி பண்டிகைக்கு வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

From Around the web